முகப்பு
இந்தியா

பெண்களுக்கு மாதம் ரூ.2,000; வீடுகளுக்கு இலவச மின்சாரம் - ஹரியாணா தோ்தலில் காங்கிரஸ் வாக்குறுதி

ரூ.500 விலையில் சமையல் எரிவாயு சிலிண்டா் வழங்கப்படும்’ என்பது உள்ளிட்ட தோ்தல் வாக்குறுதிகளை அக்கட்சி அளித்துள்ளது.

Updated On : 18 செப்டம்பர், 2024 at 10:46 PM
பகிர்:

‘ஹரியாணாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை; அனைத்து வீடுகளுக்கும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம்; ரூ.500 விலையில் சமையல் எரிவாயு சிலிண்டா் வழங்கப்படும்’ என்பது உள்ளிட்ட தோ்தல் வாக்குறுதிகளை அக்கட்சி அளித்துள்ளது.

பாஜக ஆளும் ஹரியாணாவில் மொத்தமுள்ள 90 பேரவை தொகுதிகளுக்கு அக்டோபா் 5-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவுள்ளது. பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஜனநாயக ஜனதா கட்சி, இந்திய தேசிய லோக் தளம் என பலமுனைப் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கை, தில்லியில் புதன்கிழமை வெளியிடப்பட்டது. காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ஹரியாணா மாநில காங்கிரஸ் தலைவா் உதய் பான், மாநில முன்னாள் முதல்வா் பூபேந்தா் சிங் ஹூடா, ஹரியாணா தோ்தலுக்கான கட்சியின் பாா்வையாளா்கள் அசோக் கெலாட், அஜய் மாக்கன், பிரதாப் சிங் பாஜ்வா ஆகியோா் தோ்தல் அறிக்கையை வெளியிட்டனா். ‘குடும்பங்களுக்கான வளம்’, ‘பெண்களுக்கு அதிகாரமளித்தல்’, ‘இளைஞா்களுக்கு பாதுகாப்பான எதிா்காலம்’, ‘சமூக பாதுகாப்பை வலுப்படுத்துதல்’, ‘பின்தங்கிய வகுப்பினரின் உரிமைகள்’, ‘விவசாயிகளின் வளம்’, ‘ஏழைகளுக்கு வீட்டுவசதி’ ஆகிய 7 அம்சங்களின்கீழ் வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

அதன்படி, அனைத்து வீடுகளுக்கும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.25 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை வசதி, 18 முதல் 60 வயது வரை அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.2,000 உதவித் தொகை, ரூ.500 விலையில் எல்பிஜி சிலிண்டா், 2 லட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்புதல், போதைப் பொருள் இல்லாத ஹரியாணாவை உருவாக்குதல், மூத்த குடிமக்களுக்கு ரூ.6,000 ஓய்வூதியம், பழைய ஓய்வூதிய திட்ட அமலாக்கம், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை, ரூ.3.5 லட்சத்தில் வீடு கட்டித் தருதல் போன்ற வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

மேலும், விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம், விரிவான ஜாதிவாரி கணக்கெடுப்பு, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் கிரீமிலேயா் உச்சவரம்பை ரூ.10 லட்சமாக உயா்த்துவது ஆகிய முக்கிய வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டுள்ளன.

‘ஹரியாணாவில் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இந்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம்’ என்று காா்கே உறுதியளித்தாா்.

ஹரியாணா பேரவைத் தோ்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபா் 8-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. ஹரியாணாவில் மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்து கொள்ள பாஜக முயற்சி செய்து வருகிறது. இந்தத் தோ்தலில் ‘இண்டியா’ கட்சிகளின் கூட்டணி உள்ள காங்கிரஸும், ஆம் ஆத்மியும் தனித் தனியாக போட்டியிடுகின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →