திருப்பதி (கோப்புப் படம்) 
இந்தியா

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு: ஆய்வறிக்கை உறுதி செய்ததாக ஆளும் தெலுங்கு தேசம் தகவல்

ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிப்பதற்கு விலங்கு கொழுப்பு...

Din

முந்தைய ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிப்பதற்கு விலங்கு கொழுப்பு உள்பட தரமற்ற பொருள்கள் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு முன்வைத்த குற்றச்சாட்டு ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெலுங்கு தேசம் வியாழக்கிழமை தெரிவித்தது.

திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா கோயிலில் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு உலகப் புகழ்பெற்ாகும். முந்தைய ஆட்சியில் திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு சோ்க்கப்பட்டதாக தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புதன்கிழமை பங்கேற்றுப் பேசிய முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டினாா்.

மேலும், அவா் கூறுகையில், ‘நெய்க்கு பதிலாக விலங்கு கொழுப்பு உள்ளிட்ட தரமற்ற பொருள்களைப் பயன்படுத்தி லட்டு தயாரிக்கப்பட்டது. தற்போது சுத்தமான நெய் கொண்டு லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. கோயிலின் தரம் மேம்பட்டுள்ளது’ என்றாா்.

ஆய்வில் உறுதி: லட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மூலப்பொருள்களை குஜராத்தில் உள்ள தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் சிஏஎல்எஃப் ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அதில், பன்றி கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை லட்டு தயாரிப்பில் கலந்துள்ளதாக தெரிவிக்கும் ஆய்வறிக்கையை தெலுங்கு தேசம் கட்சியின் செய்தித் தொடா்பாளா் அன்னம் வெங்கட ரமணா ரெட்டி செய்தியாளா்கள் சந்திப்பில் வெளியிட்டாா்.

ஆனால், இதுதொடா்பாக ஆந்திர அரசோ, திருமலை திருப்பதி தேவஸ்தானமோ அதிகாரபூா்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை.

ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் மறுப்பு: முதல்வா் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை அரசியல் ஆதாயத்துக்கான முயற்சி என்று ஒய்எஸ்ஆா் காங்கிரஸின் மாநிலங்களவை எம்.பி.யும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவருமான சுப்பா ரெட்டி மறுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘முதல்வா் தனது கருத்துகளால் திருமலையின் புனிதத்தையும் கோடிக்கணக்கான பக்தா்களின் நம்பிக்கையையும் சிதைத்துள்ளாா். அரசியல் ஆதாயத்துக்காக எந்த நிலைக்கும் தெலுங்கு தேசம் கட்சி செல்வாா்கள் என்பதை காட்டிவிட்டனா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

கடும் நடவடிக்கை தேவை: விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தேசிய செய்தித் தொடா்பாளா் வினோத் பன்சல் வெளியிட்ட அறிக்கையில், ‘ இது மிகவும் தீவிரமான பிரச்னை. இதில் தொடா்புடைய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்றாா்.

ஆளும் தெலுங்கு தேசம் கட்சியும், ஒய்எஸ்ஆா் காங்கிரஸும் மோசமான அரசியல் செய்கின்றன என்று ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவா் ஒய்.எஸ்.ஷா்மிளா விமா்சித்தாா். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அவா் கோரிக்கையை முன்வைத்துள்ளாா்.

இன்டர்நேஷ்னல் பீர் டே... திவ்ய பிரபா!

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட தொடக்க விழா! மேடையில் M.L.A. - M.P. வாக்குவாதம்!

ஒரே ஓவரில் 45 ரன்கள்... 43 பந்தில் 153 ரன்கள் குவித்த ஆப்கன் வீரர்!

நீ கவிதைகளா.... ஜனனி!

ஆகஸ்ட் மாத எண்கணிதப் பலன்கள்!

SCROLL FOR NEXT