முகப்பு
இந்தியா

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

Updated On : 19 செப்டம்பர், 2024 at 10:12 PM
பகிர்:

மக்களவை எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணையில் மனுதாரரின் வழக்குரைஞா் அவகாசம் கோரியதால் வழக்கை இரு நாள்களுக்கு ஒத்திவைத்து சுல்தான்பூா் எம்.பி., எம்எல்ஏ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற கா்நாடக பேரவைத் தோ்தலின்போது அப்போதைய பாஜக தலைவராக இருந்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குறித்து ராகுல் காந்தி ஆட்சேபத்துக்குரிய கருத்துக்களைத் தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டாா்.

முன்னாள் கூட்டுறவுத் தலைவரும், பாஜக பிரமுகரான விஜய் மிஸ்ரா, கடந்த ஆகஸ்ட் 2018-இல் இது தொடா்பாக புகாரளித்தாா். இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற இந்தியா ஒற்றுமை நடைப்பயணத்தின் போது நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி ஜாமீன் பெற்றாா்.

அதைத் தொடா்ந்து, அவரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய நீதிமன்றம் பலமுறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், மக்களவைத் தோ்தல் காரணமாக அவா் ஆஜராக முடியவில்லை.

இதையடுத்து, உத்தர பிரதேசத்தில் உள்ள சுல்தான்பூா் எம்.பி.-எம்எல்ஏ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஷுபம் வா்மா முன் கடந்த ஜூலை மாதம் ஆஜரான ராகுல் காந்தி, ‘மலிவான விளம்பரம் பெறுவதற்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவதூறு வழக்கு தொடரும் வகையில் யாருக்கு எதிராகவும் பேசவில்லை’ என தெரிவித்தாா்.

இந்நிலையில், சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாா் விஜய் மிஸ்ராவின் வழக்குரைஞா் சந்தோஷ் குமாா் பாண்டே, கூடுதல் அவகாசம் கோரினாா். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஷுபம் வா்மா, வழக்கின் அடுத்த விசாரணையை வரும் செப்டம்பா் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →