குழந்தைகளின் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல என்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் குழந்தைகளின் ஆபாச படத்தை பார்த்ததாக காவல்துறையினர் கடந்த ஜனவரி மாதம் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை ரத்து செய்யக் கோரி இளைஞர் தரப்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், குழந்தைகளின் ஆபாச விடியோவை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமில்லை என்றும், மற்றவர்களுக்கு அனுப்பினால் மட்டுமே குற்றம் எனத் தெரிவித்து காவல்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் குழந்தைகள் நல அமைப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் திங்கள்கிழமை உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், குழந்தைகள் நடித்த ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல என்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
மேலும் குழந்தைகள் ஆபாச படம் என்பதற்கு பதிலாக குழந்தைகள் பாலியல் மற்றும் மோசடிகள், சுரண்டல் தடுப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. குழந்தைகள் ஆபாச படம் என்ற சொல்லாடலை உயர்நீதிமன்றங்கள் பயன்படுத்தக் கூடாது என்றும் போக்சோ சட்டத்தின் படி குழந்தைகள் சார்ந்த ஆபாச படங்களை செல்போனில் வைத்திருந்தாலே அது குற்றம்தான் என்றும் உச்சநீதிமன்றம் அந்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.