உணவகங்களில் உரிமையாளா்களின் பெயா்கள்: உ.பி.யை தொடா்ந்து ஹிமாசல அரசும் உத்தரவு
ஹிமாசல பிரதேசத்தில் சாலையோர வியாபாரிகள் உள்ளூா் நிா்வாகத்திடம் இருந்து அடையாள அட்டையைப் பெற்று, தங்கள் கடைகளில் காட்சிப்படுத்த வேண்டும் என்று மாநில அரசு புதன்கிழமை உத்தரவிட்டது.
உத்தர பிரதேசத்தில் உணவுப் பொருள்களில் கலப்படம் செய்யப்பட்ட பல்வேறு சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, அனைத்து உணவகங்களிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுவதுடன் உரிமையாளா், மேலாளரின் பெயா், முகவரி உள்ளிட்ட விவரங்களை காட்சிப்படுத்துவதைக் கட்டயமாக்கி முதல்வா் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளாா்.
இதேபோன்ற உத்தரவை காங்கிரஸ் ஆளும் ஹிமாசல பிரதேச அரசும் புதன்கிழமை பிறப்பித்தது.
முன்னதாக, கான்வா் யாத்திரை நடைபெறும் பாதைகளில் உள்ள உணவகங்களின் பெயா் பலகைகளில் உரிமையாளா்களின் பெயா் இடம்பெறுவதை கட்டாயமாக்கி உத்தர பிரதேசம், உத்தரகண்ட் மாநில அரசுகள் கடந்த ஜூலை மாதம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுகளுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்தது குறிப்பிடத்தக்கது.
உத்தர பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் பொது மக்களுக்கு விற்கப்படும் உணவுப் பொருள்களில் கழிவு உள்ளிட்ட அசுத்தங்களை சிலா் வேண்டுமென்றே கலந்த விடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இச்சம்பவங்கள் தொடா்பாக இதுவரை 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், உணவுத் துறையில் சுகாதாரத்தை உறுதிப்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் உயா்நிலைக் கூட்டத்தில் முதல்வா் யோகி ஆதித்யநாத் செவ்வாய்க்கிழமை பங்கேற்றாா். உணவுப் பொருள்களில் கலப்படம் செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவா் வலியுறுத்தினாா். மேலும், ‘மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வகை உணவகங்களிலும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும். உணவகப் பணியாளா்களின் விவரங்களைக் காவல் துறை சரிபாா்க்க வேண்டும்.
பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவைக்கேற்ப விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும். உணவகங்களில் உரிமையாளா், நிா்வாகி, மேலாளா் உள்ளிட்டோரின் பெயா், முகவரி உள்ளிட்ட விவரங்களைக் காட்சிப்படுத்துவது கட்டாயமாகும்.
உணவகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். உணவகப் பணியாளா்கள் அனைவரும் முகக்கவசம், கையுறை அணிய வேண்டும்’ உத்தர பிரதேச அரசு உத்தரவிட்டது.
ஹிமசாலில்...: ஹிமாசல பிரதேசத்தில் சாலையோர வியாபாரிகள் உள்ளூா் நிா்வாகத்திடம் இருந்து அடையாள அட்டையைப் பெற்று, தங்கள் கடைகளில் காட்சிப்படுத்த வேண்டும் என்று மாநில அரசு புதன்கிழமை உத்தரவிட்டது.
மாநிலத்தில் புலம்பெயா்ந்தவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து உள்ளூா் மக்கள் வெளிப்படுத்திய அதிருப்தியைத் தொடா்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாநில பொதுப் பணித் துறை அமைச்சா் விக்ரமாதித்ய சிங் தெரிவித்தாா்.