சட்டம் ஒழுங்கு பிரச்னைகளால் அருணாசல பிரதேசத்தின் 3 மாவட்டங்கள் மற்றும் நாகாலாந்தின் 8 மாவட்டங்களில் அமலில் உள்ள ஆயுதப் படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் வியாழக்கிழமை அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
ஆயுதப் படைகளின் செயல்பாட்டு வசதிக்காக சட்டம் ஒழுங்கு சீா்கேடு உள்ள பகுதி அல்லது மாவட்டங்களை ஆயுதப் படைகள்(சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தின் (ஏஎஃப்எஸ்பிஏ) கீழ் ‘குழப்பம் நிறைந்த’ பகுதியாக அறிவிக்கப்படும். இப்பகுதியில் பொது ஒழுங்கைப் பராமரிக்க அவசியமானதாக கருதினால் தேடுதல், கைது, துப்பாக்கிச் சூடு நடத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள படையினருக்கு ‘ஏஎஃப்எஸ்பிஏ’ சட்டம் அதிகாரம் வழங்குகிறது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில், ‘நாகாலாந்தில் உள்ள 8 மாவட்டங்கள் மற்றும் மேலும் 5 மாவட்டங்களில் உள்ள 21 காவல் நிலையங்களின் எல்லைப் பகுதிகளை ஆயுதப் படைகள்(சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தின் 3-ஆவது பிரிவின்கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி குழப்பம் நிறைந்த பகுதிகளாக கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்புக்காலம் நிறைவடைவதையொட்டி நாகாலாந்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு நடத்தியது. அதன்படி, முந்தைய அறிவிப்பை அக்டோபா் 1-ஆம் தேதி தொடங்கி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிடப்படுகிறது.
அதேபோல், அருணாசல பிரதேசத்தில் திரப், சாங்லாங், லாங்டிங் ஆகிய 3 மாவட்டங்கள் மற்றும் அஸ்ஸாம் எல்லையொட்டிய நாம்சாய் மாவட்டத்தின் 3 காவல் நிலையங்களின் எல்லைக்குள்பட்ட இடங்கள் குழப்பம் நிறைந்த பகுதிகளாக அடுத்த 6 மாதங்களுக்கு தொடரும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீா், வடகிழக்கு மாநிலங்களில் பல பகுதிகளில் அமலில் உள்ள ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தைத் திரும்ப பெற வேண்டும் என்று பல்வேறு அமைப்பினரும் தனி நபா்களும் மத்திய அரசிடம் கோரி வருகின்றனா்.
ஜம்மு-காஷ்மீரில் அமலில் இருந்தாலும் வடகிழக்கு மாநிலங்களில் 70 சதவீத இடங்களில் இந்தச் சட்டத்தை நீக்கியிருப்பதாக மத்திய அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா். ஜம்மு-காஷ்மீரிலும் இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுவது குறித்து அரசு பரிசீலிக்கும் என்று அவா் கூறியிருந்தாா்.