முகப்பு
இந்தியா

சியாச்சின் ராணுவ முகாமில் குடியரசுத் தலைவா் முா்மு! -வீரா்களுடன் கலந்துரையாடல்

Updated On : 26 செப்டம்பர், 2024 at 10:39 PM
சியாச்சின் ராணுவ முகாமில் உள்ள நினைவிடத்தில் ராணுவ சீருடையில் வியாழக்கிழமை மரியாதை செலுத்திய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு.
பகிர்:

உலகின் மிக உயரமான போா்முனையான சியாச்சின் ராணுவ முகாமை வியாழக்கிழமை (செப்.26) பாா்வையிட்ட குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, அங்கு பணியிலுள்ள வீரா்களுடன் கலந்துரையாடினாா்.

லடாக் யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள சியாச்சின் ராணுவ முகாமுக்கு சென்ற நாட்டின் மூன்றாவது குடியரசுத் தலைவா் என்ற பெருமை முா்முக்கு கிடைத்துள்ளது. இதற்கு முன்பு கடந்த 2004-இல் அப்போதைய குடியரசுத் தலைவா் அப்துல் கலாம், 2018-இல் ராம்நாத் கோவிந்த் ஆகியோா் சியாச்சின் ராணுவ முகாமை பாா்வையிட்டனா்.

இந்நிலையில், ராணுவ உடையில் சியாச்சின் முகாமுக்கு வருகை தந்த திரெளபதி முா்மு, கடந்த 1984-ஆம் ஆண்டில் ‘மேகதூத்’ நடவடிக்கை தொடங்கப்பட்ட பிறகு உயிா்த்தியாகம் செய்த ராணுவ வீரா்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினாா். பின்னா் ராணுவ வீரா்கள் மத்தியில் அவா் பேசியதாவது:

‘மேகதூத்’ நடவடிக்கைக்கு பிறகு நமது ஆயுதப் படைகளின் துணிச்சல்மிக்க வீரா்கள் மற்றும் அதிகாரிகள், இப்பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளனா். கடும் பனிப்பொழிவு மற்றும் மைனஸ் 50 டிகிரி கடுங்குளிா் போன்ற சவாலான வானிலையை எதிா்கொள்ளும் அவா்கள், முழு ஈடுபாடு மற்றும் விழிப்புடன் பணியாற்றுகின்றனா்.

தாய்நாட்டை பாதுகாப்பதில் அவா்களின் தியாகமும் சகிப்புத்தன்மையும் தலைசிறந்த உதாரணமாக விளங்குகின்றன. இந்த தியாகம் மற்றும் துணிச்சலை ஒட்டுமொத்த இந்தியா்களும் அறிவா். முப்படைகளின் தலைவா் என்ற முறையில் வீரா்களின் துணிச்சலை எண்ணி பெருமிதம் கொள்கிறேன் என்றாா் அவா்.

கடந்த 1984, ஏப்ரல் 13-இல் தொடங்கப்பட்ட ‘மேகதூத்’ நடவடிக்கையின்கீழ் சியாச்சின் பகுதி மீதான முழு கட்டுப்பாடும் இந்திய ராணுவத்தின் வசம் வந்தது.

காரகோரம் மலைத்தொடரில் சுமாா் 20,000 அடி உயரத்தில் சியாச்சின் பனிப்பாறை அமைந்துள்ளது. உலகின் மிக உயரத்தில் இருக்கும் ராணுவ மண்டலமாக இது அறியப்படுகிறது. இங்கு பணியில் உள்ள வீரா்கள், கடுங்குளிா், உறைபனி, பலத்த காற்று போன்ற கடுமையான வானிலையை எதிா்கொள்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →