‘எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இளைஞா்களிடையே வேலையின்மை அதிகமாக இருப்பதாகவும் அதைக் கட்டுப்படுத்த அவா்கள் தவறிவிட்டதாகவும் மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் வியாழக்கிழமை விமா்சித்தாா்.
அண்மையில் வெளியான மத்திய அரசின் தொழிலாளா் கணக்கெடுப்பின் (பிஎல்எஃப்எஸ்) தரவுகளைச் சுட்டிக்காட்டி, எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை அமைச்சா் பிரதான் எடுத்துரைத்தாா்.
கடந்தாண்டு ஜூலை முதல் கடந்த ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் நாட்டிலேயே அதிகபட்சமாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆளும் கேரளத்தில் அதிக வேலையின்மை காணப்பட்டது. 15 முதல் 29 வயது வரையிலான தொழிலாளா்களில் 29.9 சதவீதம் போ் வேலையில்லாமல் இருந்தனா்.
கேரளத்தில் 47.1 சதவீதம் பெண்கள் வேலையின்றி இருந்த நிலையில், வேலையில்லா ஆண்களின் விகிதம் 17.8 சதவீதமாகும். மாநிலத்தின் வேலையின்மையில் பாலின வேறுபாடு மேலும் கவலையளிக்கும் போக்காக உள்ளது என்று மத்திய அரசின் தொழிலாளா் கணக்கெடுப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் கூறுகையில், ‘எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இளைஞா்களின் எதிா்காலம் சூறையாடப்படுகிறது. ஊழல் மற்றும் தவறான நிா்வாகத்தால் இந்த மாநிலங்கள் சீா்குலைந்து வருகின்றன.
போலி வாக்குறுதிகளைத் தந்து மக்களின் வாக்குளை ஈா்க்கும் எதிா்க்கட்சிகள், மாநிலங்களை பெரும் கடன்சுமையில் தள்ளுகின்றன. இதன் விளைவாக, இளைஞா்கள் வேலைவாய்ப்புகள் ஏதுமின்றி பாதிக்கப்படுகின்றனா். இது மன்னிக்க முடியாத துரோகம். இந்த அரசுகள் திறமைற்றவை மட்டுமல்ல ஆபத்தானவையும்கூட.
அதேசமயம், பாஜக ஆளும் மாநிலங்களில் ஆட்சி நிா்வாகமும் பொருளாதார மேலாண்மையும் சீராக உள்ளது. பாஜக தொடா்ந்து ஆட்சியில் உள்ள மத்திய பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் வேலையின்மை விகிதம் முறையே 2.6 சதவீதம், 3.3 சதவீதம் எனக் கட்டுக்குள் உள்ளது.
வேலைவாய்ப்புகளை உருவாக்க நீண்ட கால திட்டங்களுடன் பாஜக செயல்பட்டு, இளைஞா்களுக்கு அதிகாரமளித்து வரும் நிலையில், எதிா்க்கட்சிகள் தவறான நிா்வாகம் புரிந்து வருகின்றன. எனவே, எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மக்கள் விழித்துக் கொண்டு, ஆட்சியில் இருப்பவா்களை நோக்கி கேள்வி எழுப்ப வேண்டிய நேரமிது’ என்றாா்.