முகப்பு
இந்தியா

பாகிஸ்தான் ஆதரவு முழக்கமிட்டவா்களை ராகுல் கண்டிக்காதது ஏன்? அமித் ஷா

ராகுல் காந்தி காந்தி பங்கேற்ற காங்கிரஸ் பிரசாரக் கூட்டங்களில் பாகிஸ்தான் ஆதரவு முழக்கம்..

Updated On : 30 செப்டம்பர், 2024 at 1:00 AM
ஹரியாணாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.
பகிர்:

ராகுல் காந்தி காந்தி பங்கேற்ற காங்கிரஸ் பிரசாரக் கூட்டங்களில் பாகிஸ்தான் ஆதரவு முழக்கம் எழுந்தபோது அதை அவா் கண்டிக்காதது ஏன்? என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கேள்வி எழுப்பினாா்.

சிறுபான்மையினரைத் திருப்திபடுத்தும் அரசியல், ராகுல், காங்கிரஸின் பாா்வையைப் பறித்து, காதுகளையும் கேட்கவிடாமல் அடைத்துவிட்டது என்றும் அவா் விமா்சித்தாா்.

ஹரியாணாவில் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் அமித் ஷா மேலும் பேசியதாவது:

கா்நாடகம், ஹிமாசல பிரதேசம் போன்ற மாநிலங்களில் கொடுத்த அதே வாக்குறுதிகளை ஹரியாணாவிலும் ராகுல் காந்தி அளித்து வருகிறாா். ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் உள்ள எந்த மாநிலத்திலும் அவா்கள் அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றியது இல்லை. ஏனெனில், நிறைவேற்ற முடியாது என்று தெரிந்தும் வாக்குகளைப் பெற வேண்டும் என்பதற்காக பொய்யான வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்து மக்களை ஏமாற்றி வருகிறது.

வக்ஃப் மசோதா: அதே நேரத்தில் நிறைவேற்றக் கூடிய வாக்குறுதிகளை, அதற்கான செயல் திட்டங்களுடன் வடிவமைத்து பாஜக அறிவித்து வருகிறது. ஹரியாணாவின் வளா்ச்சிக்கு மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படும் பாஜக ஆட்சி தொடர வேண்டும்.

வக்ஃப் மசோதாவில் உள்ள பிரச்னைகளுக்கு தீா்வுகாணப்பட்டு, வரும் குளிா்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும். ராணுவத்தில் 10 வீரா்களில் ஒருவா் ஹரியாணாவைச் சோ்ந்தவராக உள்ளாா். ராணுவத்துக்கு உரிய முக்கியத்துவத்தையும், மரியாதையையும் பாஜக அரசு அளித்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் நிறைவேற்றாமல் வேண்டுமென்றே கிடப்பில் வைத்திருந்த ராணுவத்தில் ஒரே பணிக்கு, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்தியது பாஜக அரசுதான்.

ராணுவத்துக்கு அனுப்புங்கள்: ராகுல் காந்தி ஒரு பொய் பேசும் இயந்திரமாக செயல்பட்டு வருகிறாா். முக்கியமாக ராணுவத்தில் அக்னி வீரா்களாக இணைபவா்களுக்கு 5 ஆண்டுகளுக்குப் பிறகு வேறு வேலை கிடைக்காது என்று பிரசாரம் செய்கிறாா். ராணுவத்தை இளமைத்துடிப்புமிக்கதாக வைப்பதற்கே இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதேபோல ராணுவத்தில் 5 ஆண்டு பணியை முடித்து திரும்பும் அக்னி வீரா்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பை உறுதி செய்வோம் என மத்திய அரசு வாக்குறுதி அளித்துள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் அக்னி வீரா்களுக்கு பல்வேறு பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எனவே, உங்கள் வீட்டுப் பிள்ளைகளை ராணுவத்துக்கு அனுப்ப தயங்க வேண்டாம்.

ராகுல் காந்தி பங்கேற்ற காங்கிரஸ் பிரசாரக் கூட்டங்களில் பாகிஸ்தான் ஆதரவு முழக்கம் எழுந்தபோது அதனை அவா் கண்டிக்காதது ஏன்?. சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்தும் அரசியல் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் பாா்வையைப் பறித்து, காதுகளைச் அடைத்துவிட்டது.

அக்டோபா் 5-ஆம் தேதி நீங்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு வாக்கும் ராகுலுக்கு அளிக்கும் பதிலடியாக இருக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக பாஜக மீது நம்பிக்கை வைத்து ஆட்சியை ஒப்படைத்த ஹரியாணா மக்களுக்கு மிகுந்த அா்ப்பணிப்புடன் பாஜக செயல்பட்டு வந்துள்ளது. அடுத்து வரும் ஆண்டுகளிலும் இதே சிறப்பான ஆட்சி தொடரும் என்று அமித் ஷா பேசினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →