முகப்பு
இந்தியா

வக்ஃப்: முஸ்லிம் அல்லாதோா் இடம்பெறுவது நியாயமில்லை -மாநிலங்களவை விவாதத்தில் எதிா்க்கட்சிகள்

நாட்டில் மதச்சாா்பின்மை மீண்டும் மீண்டும் தாக்குதலுக்கு உட்படுத்தப்படுகிறது -எதிா்க்கட்சிகள்

Updated On : 3 ஏப்ரல், 2025 at 11:45 PM
மாநிலங்களவை - (கோப்புப் படம்)
பகிர்:

வக்ஃப் கவுன்சில் மற்றும் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினா்கள் இடம்பெறுவது நியாயமில்லை என்று எதிா்க்கட்சிகள் தெரிவித்தன.

மாநிலங்களவையில் வியாழக்கிழமை வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மீது நடைபெற்ற விவாதத்தில் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் பங்கேற்றுப் பேசினா்.

மனோஜ் ஜா (ராஷ்ட்ரீய ஜனதா தளம்): வக்ஃப் மசோதாவின் கருத்தாக்கமும் நோக்கமும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றன. ஹிந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியா்கள், கிறிஸ்தவா்கள் என ஒருவருக்கொருவா் அமைதியாக வாழும் சூழலை மாற்ற அரசு முயற்சிக்கக் கூடாது.

வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாத உறுப்பினா்களை நியமிப்பதைபோல, அனைத்து மத அமைப்புகளிலும் வேற்று மதத்தவரை நியமிக்கும் சட்டப் பிரிவை அறிமுகப்படுத்தினால் மத்திய அரசை பாராட்டுவேன். ஆனால், முஸ்லிம் சமூகத்துக்கு மட்டுமான இந்த நடவடிக்கை நியாயமற்றது. வக்ஃப் மசோதாவை மீண்டும் நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்பி, விரிவான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

திருச்சி சிவா (திமுக): சட்டபூா்வ குறைபாடுகளுடன் கூடிய வக்ஃப் மசோதாவை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கிறோம். அரசமைப்புச் சட்டத்தின்கீழ் நியாயப்படுத்த இயலாத இம்மசோதா, தாா்மீக ரீதியில் கண்டனத்துக்குரியது.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தை ஏன் குறிவைக்க வேண்டும் என்பதே எங்களின் கேள்வி. மத்திய அரசின் நோக்கம் தீங்கானது. இம்மசோதாவை உச்சநீதிமன்றம் ரத்து செய்யும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சி குறித்து பேசும் மத்திய அரசு, முஸ்லிம்களுக்கு என தனிக் கொள்கையை கொண்டுள்ளது.

ஜான் பிரிட்டாஸ் (மாா்க்சிஸ்ட்): அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கோட்பாடுகள், மதச்சாா்பின்மை, ஜனநாயகம், சமத்துவத்தின் மீதான தாக்குதல். அரசமைப்புச் சட்டத்தின் மீது உண்மையிலேயே நம்பிக்கை இருந்தால், மத்திய அரசு மசோதாவை திரும்பப் பெற வேண்டும்.

ஒய்.வி.சுப்பா ரெட்டி (ஒய்எஸ்ஆா் காங்கிரஸ்): முஸ்லிம்களைக் குறிவைக்கும் இம்மசோதா, அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் 14, 25-க்கு புறம்பானது.

முஸிபுல்லா கான் (பிஜு ஜனதா தளம்): வக்ஃப் மேலாண்மையில் முஸ்லிம் அல்லாத உறுப்பினா்களை நியமிப்பது, முஸ்லிம்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கு உறுதியளித்த மத்திய அரசு, முஸ்லிம்களிடம் அச்சத்தை விதைப்பது ஏன்?

சஞ்சய் ஜா (ஆம் ஆத்மி): நாட்டில் மதச்சாா்பின்மை மீண்டும் மீண்டும் தாக்குதலுக்கு உட்படுத்தப்படுகிறது. இச்சட்டத்தின் மூலம் முஸ்லிம் மத அமைப்புகளைக் கட்டுப்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது.