வக்ஃப் சட்ட திருத்தத்தால் முஸ்லிம்கள் அடுத்த 3 ஆண்டுகளில் பலனடைவர்: மத்திய அமைச்சர்
முஸ்லிம்கள் அடுத்த 3 ஆண்டுகளில் பலனை எதிர்பார்க்கலாம்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
ஸ்ரீநகர்: வக்ஃப் சட்ட திருத்தத்தால் முஸ்லிம்கள் அடுத்த 3 ஆண்டுகளில் பலனை எதிர்பார்க்கலாம் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஞாயிற்றுக்கிழமை(ஏப். 6) தெரிவித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, “இந்த மசோதாவை புரிந்துகொள்ள இயலாதவர்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பது தெளிவாகிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு பார்க்கும்போது, வக்ஃப் சட்டத்தில் நாங்கள்(மத்திய அரசு) கொண்டு வந்துள்ள சட்ட திருத்தங்களை புரிந்துகொண்ட மக்கள், இதன்மூலம், முஸ்லிம்கள், ஏழைகள், பெண்கள், பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்தோர் அடுத்த 2 - 3 ஆண்டுகளில் பலனடைவர் என்பதை அறிந்து கொள்வர்” என்று தெரிவித்தார்.
மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வறிக்கையின் அடிப்படையில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து, இந்த மசோதாவுக்கு சனிக்கிழமை(ஏப். 5) குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், இந்த மசோதா சட்ட வடிவம் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பிகாரில் வக்ஃப் மசோதா அமலாகாது! -தேஜஸ்வி யாதவ்