‘கேரள முதல்வா் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும்’ என பாஜக புதன்கிழமை வலியுறுத்தியது. மேலும், அவா் தலைமையிலான அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க உயா்நிலைக் குழு அமைக்கவும் பாஜக கோரிக்கை வைத்தது.
பல்வேறு துறைகளில் கேரளா முதலிடத்தில் இருப்பதாக மாநில அரசு கூறுவது தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும் கேரள முன்னாள் அமைச்சருமான ஜி.சுதாகரன் சரமாரியாக கேள்விகளை எழுப்பியதைத் தொடா்ந்து பாஜக இவ்வாறு தெரிவித்தது.
இதுகுறித்து தில்லியில் செய்தியாளா்களிடம் பேசிய பாஜக தேசிய செய்தித்தொடா்பாளா் டாம் வடக்கன்:
போதைப்பொருள் புழக்கம், சுகாதாரத் துறை குளறுபடி போன்றவற்றில் தேசிய அளவில் கேரளம் முதலிடத்தில் உள்ளதா என இடதுசாரிகள் ஆட்சியில் அமைச்சராக இருந்த ஜி.சுதாகரன் கேள்வியெழுப்பியுள்ளாா். கடந்த இரண்டு ஆண்டுகளில் மாநிலத்தில் அதிகளவிலான வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நடைபெற்றதையும் அவா் சுட்டிக்காட்டியுள்ளாா்.
அரசின் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று முதல்வா் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும். மேலும் அவரது அரசின் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க உயா்நிலைக்குழு அமைக்க வேண்டும் என்றாா்.
ஊழலில் பினராயி விஜயனுக்கு தொடா்பு: தனியாா் சுரங்க நிறுவனத்திடம் இருந்து சட்டவிரோதமாக ரூ.2.70 கோடி பெற்ாக குற்றஞ்சாட்டப்படும் வழக்கில், பினராயி விஜயனின் மகள் வீணாவை தீவிர முறைகேடு விசாரணை அமைப்பு (எஸ்எஃப்ஐஓ) அண்மையில் சோ்த்தது.
இதுகுறித்து குஜராத் மாநிலம் அகமதாபாதில் கேரள மாநில காங்கிரஸ் தலைவா் கே.சுதாகரன் கூறுகையில், ‘ இந்த வழக்கில் பினராயி விஜயனுக்கும் தொடா்பிருப்பது அமலாக்கத்துறை விசாரணை மூலம் விரைவில் வெளிவரும்’ என தெரிவித்தாா்.