மும்பை தாக்குதலில் கூட்டுச் சதியில் மூளையாக செயல்பட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூா் ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டதாகவும், அவர் வந்த விமானம் தில்லியில் தரையிறங்கியதாகவும் தேசிய புலானாய்வு முகமை தெரிவித்துள்ளது.
உலகையே உலுக்கிய 2008-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 166 பேர் பலியாகினர்.
லஷ்கா்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கம் நடத்திய இந்தத் தாக்குதலில், பாகிஸ்தானை பூா்விகமாக கொண்ட தஹாவூா் ராணா கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
அவர் மீதான குற்றச்சாட்டு என்னவென்றால் லஷ்கா்-ஏ-தொய்பா இயக்கத்துக்கு நிதி உதவி உள்ளிட்ட உதவிகளை செய்து வந்தது நிரூபிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அவரை குற்றவாளி என்று அமெரிக்க நீதிமன்றம் தீா்ப்பளித்தது. அந்நாட்டின் லாஸ் ஏஞ்சலீஸ் சிறையில் அவா் அடைக்கப்பட்டிருந்தார்.
அவரை இந்தியாவுக்குக் கொண்டு வர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால் தான்னை இந்திய சிறையில் சித்திரவதை செய்வார்கள் என்று கூறி, நாடு கடத்துவதற்கு எதிராக ராணா தாக்கல் செய்த மனுவை கடந்த ஜன.21-ஆம் தேதி அமெரிக்க உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
இந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் அமெரிக்கா சென்றிருந்த பிரதமா் மோடியிடம், தஹாவூா் ராணா இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் உறுதியளித்திருந்தார்.
இதைத்தொடா்ந்து நாடு கடத்தப்படுவதற்கு எதிராக அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் தஹாவூா் ராணா செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்ட நிலையில், இந்தியாவிலிருந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அமெரிக்கா புறப்பட்டனர். அவர்களிடம் தஹாவூர் ராணா ஒப்படைக்கப்பட்ட நிலையில், இன்று இந்தியா கொண்டுவரப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமை அறிவித்திருக்கிறது.
இதுபற்றி தேசிய புலனாய்வு முகமை, “இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் அமெரிக்காவில் உள்ள பிற தொடர்புடைய அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து வெற்றிகரமாக நாடு கடத்தியுள்ளது” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.