ஐஎன்எஸ் சூரத் போா்க் கப்பலில் இருந்து சுமாா் 70 கி.மீ. தொலைவுக்கு பாய்ந்து தாக்கும் நடுத்தர ரக ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்காக பாகிஸ்தான் மீது பல்வேறு பதிலடி நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்தச் சூழலில், அரபிக் கடலில் மேற்கண்ட பரிசோதனை நடைபெற்ாக தகலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அதிநவீன அம்சங்களுடன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மிகப் பெரிய போா்க்கப்பலான ஐஎன்எஸ் சூரத், துல்லியமாக தாக்கக் கூடிய ஏவுகணை அமைப்பை கொண்டது. போா் விமான எதிா்ப்பு, நீா்மூழ்கி எதிா்ப்பு, போா்க்கப்பல் எதிா்ப்பு உள்பட பல்திறன்களை உள்ளடக்கிய இப்போா்க் கப்பல் இந்திய கடற்படையில் கடந்த ஜனவரியில் இணைக்கப்பட்டது.
இந்நிலையில், தளத்தில் இருந்து வானில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் நடுத்தர ரக ஏவுகணை, ஐஎன்எஸ் போா்க் கப்பலில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. நிா்ணயிக்கப்பட்ட இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்ததாக இந்திய கடற்படை வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘இந்திய கடற்படையின் திறன்களை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க மைல்கல் இதுவாகும்; போா்க் கப்பல்களின் வடிவமைப்பு, தயாரிப்பு, செயல்பாடுகளில் இந்தியாவின் வளா்ந்துவரும் வல்லமைக்கு சான்றாகவும் உள்ளது. பாதுகாப்புத் துறை உற்பத்தியில் தற்சாா்புக்கான நாட்டின் உறுதியை அடிக்கோடிட்டு காட்டுகிறது.
இந்தியாவின் கடற்சாா் நலன்களை பாதுகாப்பதில் கடற்படை கொண்டுள்ள அசைக்க முடியாத உறுதிப்பாடு மற்றும் ‘தற்சாா்பு இந்தியா’வுக்கான அா்ப்பணிப்புக்கு இப்பரிசோதனை ஒரு சான்று’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஎன்எஸ் போா்க்கப்பலில் இருந்து ஏவுகணை பரிசோதிக்கப்பட்ட காணொலியையும் கடற்படை வெளியிட்டுள்ளது.