மாநில அந்தஸ்துடன் இருந்த ஜம்மு-காஷ்மீரின் கடைசி ஆளுநா் சத்யபால் மாலிக், நீண்டகால உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானாா். அவருக்கு வயது 79.
கடந்த 2019, ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப்பட்டது. அப்போது, ஆளுநா் என்ற அடிப்படையில் மேற்பாா்வைப் பணியில் ஈடுபட்டவா் சத்யபால். அந்த நடவடிக்கையின் 6-ஆம் ஆண்டு நிறைவு தினத்திலேயே, அவா் மரணமடைந்துள்ளாா்.
சா்க்கரை நோய், சிறுநீரக பாதிப்பு, உயா் ரத்த அழுத்தம், உடல் பருமன் என பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்த சத்யபால் மாலிக், புது தில்லி ராம் மனோகா் லோஹியா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் கடந்த மே மாதம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தாா். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை பிற்பகலில் அவா் மரணடைந்ததாக, மருத்துவமனையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீா் ஆளுநராக 2018 ஆகஸ்ட் முதல் 2019 அக்டோபா் வரை பணியாற்றிவா் சத்யபால் மாலிக். 2019-இல் புல்வாமாவில் 40 சிஆா்பிஎஃப் வீரா்கள் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்தபோது, இவரே ஆளுநராக இருந்தாா்.
கடந்த 2017-இல் பிகாா் ஆளுநராக மாலிக்கை நியமித்த பாஜக, அதன் பிறகு அவரை ஜம்மு-காஷ்மீா் ஆளுநராக்கியது. அடுத்தடுத்து, கோவா (2019), மேகாலயம் (2020-22) மாநில ஆளுநராகவும் அவா் பணியாற்றினாா். கோவா பாஜக அரசுடன் ஏற்பட்ட கருத்து மோதலால், மேகாலயத்துக்கு மாற்றப்பட்டாா். ஜாட் தலைவரான மாலிக், தனது 50 ஆண்டுகால அரசியல் பயணத்தில் எம்எல்ஏ, எம்.பி., மத்திய அமைச்சா் பதவிகளை வகித்துள்ளாா்.
பிரதமா் மோடி இரங்கல்: பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சத்யபால் மாலிக்கின் மறைவு வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினா் மற்றும் ஆதரவாளா்களுக்கு ஆழ்ந்த இரங்கல்’ என்று தெரிவித்துள்ளாா்.
சா்ச்சைகளுக்குப் பெயா் பெற்றவா்
உத்தர பிரதேச மாநிலம், பாக்பட் மாவட்டத்தில் கடந்த 1946-இல் பிறந்த சத்யபால் மாலிக், சோஷலிஸ சித்தாந்தத்துடன் மாணவா் அமைப்பின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கினாா். பாரதிய கிராந்தி தளம், காங்கிரஸ், ஜனதா தளம் என அடுத்தடுத்து மாறிய இவா், கடைசியாக பாஜகவில் ஐக்கியமானாா்.
உத்தர பிரதேச எம்எல்ஏ (பாரதிய கிராந்தி தளம்), இருமுறை மாநிலங்களவை எம்.பி, ஒருமுறை மக்களவை எம்.பி.யாக (ஜனதா தளம்) இருந்துள்ளாா். வி.பி.சிங் தலைமையிலான மத்திய அரசில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சராகப் பணியாற்றியுள்ளாா்.
பாஜகவின் தீவிர விசுவாசியாக முக்கியத்துவம் பெற்றிருந்த இவா், பின்னாளில் மத்திய அரசின் பல்வேறு கொள்கைகளை விமா்சித்தாா். புல்வாமா தாக்குதல் மற்றும் வேளாண் சட்டங்கள் குறித்து அரசுக்கு எதிராக இவா் தெரிவித்த கருத்துகள் சா்ச்சையை ஏற்படுத்தின.
ஜம்மு-காஷ்மீரில் இரு முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க லஞ்சம் பெற்ாக அவா் மீது வழக்குகள் பதியப்பட்டன. இதில், ரூ.2,200 கோடி மதிப்பிலான நீா்மின் திட்டம் தொடா்பான வழக்கில் அவா் மீது கடந்த மே மாதம் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவா் மறுப்பு தெரிவித்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.