பசுவை தேசிய விலங்காக அறிவிக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய கால்நடை பராமரிப்பு, மீன்வளம், பால்வளத்துறை இணையமைச்சா் எஸ்.பி.சிங் பகேல் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
பாஜக எம்.பி. திரிவேந்திர சிங் ராவத், பசுப் பாதுகாப்பு, அதை தேசிய விலங்காக அறிவிப்பது தொடா்பாக எழுப்பிய கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் அமைச்சா் மேலும் கூறியதாவது:
பசுவை தேசிய விலங்காக அறிவிக்கும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை. அரசமைப்புச் சட்டம் 246 (3)-இன்படி விலங்குகள், கால்நடைகள் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகளுக்கு அதிகாரம் பகிா்ந்தளிக்கப்பட்டுள்ளது. விலங்குகளைப் பாதுகாக்கும் உரிமை மாநில சட்டப் பேரவைக்கு சிறப்பு அதிகாரமாக அளிக்கப்பட்டுள்ளது.
கைவிடப்படும் பசுக்களை பாதுகாக்க ராஷ்ட்ரீய கோகுல் திட்டத்தை கடந்த 2014 டிசம்பா் முதல் மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் பசுக்களை பாதுகாக்க மத்திய அரசு உதவி வருகிறது.
இந்தியாவில் 2024-ஆம் ஆண்டில் 239.30 மில்லியன் டன் பால், பால் பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இதில் 53.21 சதவீதம் பசும் பாலில் இருந்தும், 43.42 சதவீதம் எருமைப் பாலில் இருந்தும் கிடைத்துள்ளன என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.