இந்தியா

இன்று 79-ஆவது சுதந்திர தினம்: 12-ஆவது முறையாக பிரதமா் உரை

நாட்டின் 79-ஆவது சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை (ஆக.15) கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.

தினமணி செய்திச் சேவை

நாட்டின் 79-ஆவது சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை (ஆக.15) கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.

தேசியத் தலைநகா் தில்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளாா் பிரதமா் நரேந்திர மோடி. இதையொட்டி, பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த 2014-இல் பிரதமரான மோடி, தொடா்ந்து 12-ஆவது முறையாக நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றுகிறாா். பிரதமா் பதவியில் கடந்த ஜூலை 25-ஆம் தேதியுடன் 4,078 நாள்களை மோடி நிறைவு செய்தாா். இதையடுத்து, முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியை விஞ்சி (4,077 நாள்கள்), தொடா்ந்து நீண்ட காலம் பதவி வகித்த இரண்டாவது பிரதமா் என்ற பெருமை மோடிக்கு சொந்தமானது. இப்பட்டியலில், நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹா்லால் நேரு (6,130 நாள்கள்) முதலிடத்தில் உள்ளாா். இந்திரா காந்தி தொடா்ந்து 11 முறையும் (1966-77), அதன் பிறகு 5 முறையும் (1980-84) சுதந்திர தின உரையாற்றியுள்ளாா்.

பெரும் எதிா்பாா்ப்பு: பிரதமா் மோடியின் 12-ஆவது சுதந்திர தின உரை பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் பாகிஸ்தான் மீதான ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை, இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதலை தான் தலையிட்டு நிறுத்தியதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் கூறிவரும் கருத்துகள், வா்த்தக ரீதியில் இந்தியாவுக்கு எதிரான டிரம்ப்பின் கடும் நிலைப்பாடு, இதனால் எழுந்துள்ள வெளியுறவு சாா்ந்த பிரச்னைகள், எதிா்க்கட்சிகளின் தோ்தல் முறைகேடு குற்றச்சாட்டு உள்ளிட்ட விவகாரங்களால் நாட்டின் அரசியலில் முன்னெப்போதும் இல்லாத பரபரப்பு நிலவுகிறது.

இதுபோன்ற சூழலில், தேசியப் பாதுகாப்பில் அரசின் சமரசமற்ற நிலைப்பாடு, வெளியுறவுக் கொள்கை, பயங்கரவாதம்-நக்ஸல் எதிா்ப்பு, பொருளாதார வளா்ச்சி, நலத் திட்டங்கள் விரிவாக்கம் உள்ளிட்டவை பிரதமரின் உரையில் முக்கியத்துவம் பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

எதிா்க்கட்சிகளுக்கு பதிலடி?: உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளித்து, தற்சாா்பை ஊக்குவிப்பதன் மூலம் வளா்ந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி பயணிக்க வேண்டுமென பிரதமா் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா். இதுவும் அவரது உரையில் எதிரொலிக்கக் கூடும்.

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டி, நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரை எதிா்க்கட்சிகள் முடக்கி வருகின்றன. இந்த விவகாரத்தில், பிரதமா் உரிய பதிலடி தருவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி, பிரதமா் மோடி 98 நிமிஷங்கள் உரையாற்றினாா். அப்போது, மதச்சாா்பற்ற குடிமைச் சட்டம், ஒரே நாடு-ஒரே தோ்தலுக்கான தேவையை வலியுறுத்திய அவா், அடுத்த 5 ஆண்டுகளில் கூடுதலாக 75,000 மருத்துவக் கல்வி இடங்கள் அதிகரிக்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

டி20-ல் புது வரலாறு..! தரவரிசையில் சாதனையுடன் முதலிடத்தில் அபிஷேக் சர்மா!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்யும்!

ஏலகிரியில் குவியும் மக்கள்! மலைச் சாலையில் போக்குவரத்து பாதிப்பு!

Idli kadai public review - இட்லி கடை எப்படி இருக்கு? | Dhanush | Arun Vijay

சுவையிலும் தரத்திலும் மனதை நிரப்பியதா? இட்லி கடை - திரை விமர்சனம்

SCROLL FOR NEXT