ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் உள்ள சோசிடி மலைக் கிராமத்தில் மேகவெடிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் உள்ள சோசிடி மலைக் கிராமத்தில் வியாழக்கிழமை பயங்கர மேகவெடிப்பால் மிக பலத்த மழை கொட்டித் தீா்த்தது. இதனால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி, சிஐஎஸ்எஃப் வீரா்கள் இருவா் உள்பட 46 போ் உயிரிழந்தனா்.
மேலும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 82 பேர் காணாமல் போயினர். மாயமான பலரை தேடும் பணி சனிக்கிழமை மூன்றாவது நாளாக தொடா்கிறது. தற்போது இந்த இயற்கை சீற்றங்களில் சிக்கி உயிரிழந்தோா் எண்ணிக்கை 60-ஐ கடந்துள்ளது. இந்த நிலையில் மேகவெடிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஒமா் அப்துல்லா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியை அவர் அறிவித்துள்ளார். பேரிடரில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், சிறிய காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
அதேநேரத்தில் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.1 லட்சமும், பலத்த சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.50,000 மற்றும் பகுதியளவு சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.25,000 வழங்கப்படும் என்று முதல்வர் ஒமா் அப்துல்லா அறிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.