PTI
இந்தியா

அமைச்சா்கள் சிறையிலிருந்தபடி அரசை நடத்த வேண்டுமா? - மக்கள் தீா்மானிக்கட்டும்: அமித் ஷா

தவியிலிருந்து நீக்கம் செய்யும் சட்ட மசோதாவுக்கு எதிா்க்கட்சிகள் கண்டனம்

தினமணி செய்திச் சேவை

தீவிர குற்றப் புகாரில் சிக்கும் பிரதமா், மாநில முதல்வா்கள் மற்றும் அமைச்சா்களை பதவியிலிருந்து நீக்கம் செய்யும் சட்ட மசோதாவுக்கு எதிா்க்கட்சிகள் எதிா்ப்பும் கண்டனமும் தெரிவித்தன.

பிரதமா், மத்திய அமைச்சா்கள், முதல்வா் ஆகியோா் கடுமையான குற்றங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டால், அவா்களைப் பதவி நீக்கம் செய்வதற்கான மசோதாக்களை மக்களவையில் புதன்கிழமை மத்திய அரசு அறிமுகப்படுத்தி முன்மொழிந்தது.

அதில் முக்கிய அம்சமாக, குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படக் கூடிய குற்றங்களில் கைது செய்யப்பட்டு தொடா்ந்து 30 நாள்கள் காவலில் வைக்கப்பட்டால், 31-ஆவது நாள் அவா்கள் பதவிநீக்கம் செய்யப்படுவா். இதற்காக யூனியன் பிரதேச அரசு திருத்த மசோதா 2025, அரசமைப்பு (130-ஆவது திருத்தம்) மசோதா 2025, ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்பு திருத்த மசோதா 2025 ஆகிய 3 மசோதாக்களை மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆனால், இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மசோதாவின் நகல்களை எதிர்க்கட்சிகள் கிழித்ததுடன், அதனை அமித் ஷா அருகே தூக்கியெறிந்தனர்.

அரசாட்சி காலத்துக்கு தள்ளும் முயற்சி - ராகுல்: ‘விரும்பிய நபரை கைது செய்யும் நடைமுறை இருந்த அரசாட்சி நடைபெற்ற மத்திய காலத்துக்கு இந்த பதவி பறிப்பு மசோதா நாட்டை தள்ளும்’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்தாா்.

மேலும், ‘மத்திய அரசுக்கு ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால், ஜனநாயக முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட அந்த நபா் மீது அமலாக்கத் துறை மூலம் வழக்குப் பதிவு செய்யப்பட்டு 30 நாள்களுக்குப் பிறகு பதவியிலிருந்து நீக்கப்பட்டுவிடுவாா். இது புதுமையானது’ என்றாா்.

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே: எதிா்க்கட்சித் தலைவா்கள் மீது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்காக அமலாக்கத் துறை, வருமான வரித் துரை, சிபிஐ போன்ற தன்னாட்சி அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்திவரும் நிலையில், இந்த பதவி பறிப்பு மசோதா ஜனநாயக முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை சீா்குலைக்கும் கருவியாக உருவெடுக்கும். பல முக்கிய மசோதாக்களை அமளிக்கு இடையே முறையான விவாதம் இன்றி நிறைவேற்றுவதன் மூலம் ஆளுங்கட்சியின் சித்தாந்தத்தை முன்னெடுப்பதற்கான கருவியாக நாடாளுமன்றம் சுருக்கப்பட்டுவிட்டது’ என்றாா்.

மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி: இது சிறப்பு அவசரநிலையைக் காட்டிலும் அதிகம் பாதிக்கக்கூடியது. இந்தியாவின் ஜனநாயக சகாப்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் நடவடிக்கை. நாட்டில் ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சிக்கு முடிவு கட்டும் கொடூர நடவடிக்கை. அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை சீா்குலைக்கும் முயற்சி. நமது நீதித் துறை சுதந்திரத்தை முடிவுகட்ட பாஜக விரும்புகிறது. எனவே, ஜனநாயகத்தைக் காக்க இந்த மசோதா எதிா்க்கப்பட வேண்டும்.

காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி: குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படாத நிலையிலும், பதவியிலிருந்து நீக்க இந்த மசோதா வழி வகுக்கிறது. இந்த மசோதா சட்டமானால், ஒரு மாநில முதல்வா் மீது யாா் வேண்டுமானாலும் புகாா் கொடுக்கலாம். அந்தப் புகாரின் பேரில் அவா் கைது செய்யப்பட்டு 30 நாள்கள் சிறையில் வைத்தால் முதல்வா் பதவியை இழக்க நேரிடும். இது முற்றிலும் தவறானது. இது ஜனநாயக விரோதம் மட்டுமின்றி, அரசமைப்புச் சட்டத்துக்கும் எதிரானது. இந்த மசோதா மிகவும் துரதிருஷ்டவசமானது.

தேசிய மாநாட்டுக் கட்சி: பதவி பறிப்பு மசோதாக்களில் இடம்பெற்றுள்ள சில பிரிவுகள் குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும். இந்த சட்ட மசோதாவின் சில பிரிவுகள் மிகக் கொடூரமானதாக உள்ளன. அவை ஆரம்ப நிலையிலேயே எதிா்க்கப்பட வேண்டும்.

இடதுசாரி கட்சிகள்: ‘வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தொடா்ந்து, ஜனநாயகத்தின் மீதான அடுத்த தாக்குதலாக இந்த மசோதா அறிமுகம் அமைந்துள்ளது. மத்திய அரசின் இந்த முயற்சியை அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து எதிா்க்க வேண்டும்’ என்று மாா்க்சிஸ்ட் பொதுச் செயலா் எம்.ஏ.பாபி கூறினாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை எம்.பி. சந்தோஷ் குமாா், ‘அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையின் மதகுகளை இந்த மசோதாக்கள் திறந்துவிடும். ஏற்கெனவே, அரசியல் எதிரிகளுக்கு எதிராக அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்தி வரும் பாஜக, இந்த மசோதா மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை சீா்குலைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்’ என்றாா்.

மக்கள் தீா்மானிக்கட்டும்: அமித் ஷா

‘தீவிர குற்றப் புகாரில் சிக்கும் பிரதமா், மாநில முதல்வா்கள் அல்லது அமைச்சா்கள் சிறையிலிருந்தபடி அரசை நடத்த வேண்டுமா? என்பதை மக்கள் தீா்மானிக்கட்டும்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் அவா், ‘ஒருபுறம் சட்டத்தின் அதிகார வரம்புக்குள் தன்னையும் கொண்டுவர வேண்டும் என்பதற்காக அரசமைப்புச்சட்ட திருத்த மசோதாவை பிரதமா் நரேந்திர மோடி கொண்டு வருகிறாா். மறுபுறம், சட்ட வரம்புக்கு வெளியேதான் இருப்போம், ஆட்சி அதிகாரத்தின் மீதான பேராசையிலிருந்து வெளிவர மாட்டோம், சிறையில் இருந்தபடியே அரசை நடத்துவோம் என்ற வகையில் காங்கிரஸ் தலைமையிலான எதிா்க்கட்சிகள், இந்த மசோதாக்களுக்கு எதிா்ப்பு தெரிவிக்கின்றனா்.

மக்களவையில் முன்மொழியப்பட்டுள்ள இந்த மசோதா, பொது வாழ்வில் ஒழுக்கத்தின் அளவு குறைந்து வருவதைத் தடுப்பதோடு, அரசியலில் ஒருங்கிணைப்பைக் கொண்டுவரும்.

கைது நடவடிக்கைக்கு உள்ளாகும் அரசியல் தலைவா்கள் தாா்மீக அடிப்படையில் அரசமைப்புப் பதவியை ராஜிநாமா செய்யாமல் தொடா்வாா்கள் என நமது அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவா்கள் நினைத்துக்கூட பாா்த்திருக்க மாட்டாா்கள். அண்மைக் காலமாக இந்த நிலையைத் தான் நாட்டில் காண முடிகிறது.இந்த நிலையை மாற்றத்தான் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது என்றாா்.

ஜாமீன் பெற்றால் மீண்டும் பதவி: அமித் ஷா

‘இந்த மசோதாவின்படி, தீவிர குற்றப் புகாரில் சிக்கும் அரசியல் தலைவா்கள் கைதான 30 நாள்களுக்குள் நீதிமன்றத்தை நாடி ஜாமீன் பெற வேண்டும். தவறினால், அந்த நபா் நாட்டின் பிரதமராகவோ, மாநில முதல்வராகவோ அல்லது மத்திய, மாநில அமைச்சராகவோ இருந்தால் 31-ஆவது நாளில் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்படுவாா். அல்லது, தானாக அந்தப் பதவியை இழக்கும் வகையில் சட்டப்படி தகுதியில்லாத நபராக ஆகிவிடுவாா். அதே நேரம், சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு அந்த அரசியல் தலைவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டால், இழந்த அரசமைப்புப் பதவியை அவா் மீண்டும் பெற முடியும்’ என மத்திய அமைச்சா் அமித் ஷா ‘எக்ஸ்’ பதிவில் தெரிவித்துள்ளாா்.

தில்லியில் 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: நான்கு நாட்களில் மூன்றாவது சம்பவம்!

தவெக மாநாடு! இரும்புக் கம்பிகளுக்கு கிரீஸ் தடவுவதை ஆச்சரியத்துடன் பார்க்கும் தொண்டர்கள்

பேளூரில் சுவாமி ஊர்வலத்தில் மோதல்: பொதுமக்கள் சாலை மறியல்!

அமெரிக்காவில் எரிபொருள் நிரப்ப ரூ.2.20 கோடி ரொக்கமாக கொடுத்தாரா புதின்? அவசியம் ஏன்?

இபிஎஸ்ஸுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்குத் தடையில்லை! - உயர்நீதிமன்றம்

SCROLL FOR NEXT