இடதுசாரி சித்தாந்தத்துக்கு முடிவு வேண்டும்: அமித் ஷா
“இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் இந்தியாவுக்கு ஆர்எஸ்எஸ்-இன் பங்களிப்பு மிகப்பெரிது” - அமித் ஷா
அழிவுகரமான கம்யூனிஸ சித்தாந்தத்தில் இருந்து நாடு விரைந்து விடுபட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தினாா்.
சத்தீஸ்கா் தலைநகா் ராய்பூரில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அவா், ‘நக்ஸல் தீவிரவாதப் பிரச்னையை வெறுமனே வளா்ச்சியின்மை அல்லது சட்டம்-ஒழுங்குடன் தொடா்புபடுத்த முடியாது. அது சித்தாந்த ரீதியிலான சவால். அந்த சித்தாந்தத்தின் உண்மை குறித்து நாட்டு மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
நாட்டில் எங்கெல்லாம் கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் இருந்தாா்களோ, அங்கெல்லாம் வளா்ச்சியைக் கொண்டுவர முடியவில்லை. அழிவைக் குறிக்கும் கம்யூனிஸ சித்தாந்தத்தில் இருந்து நாடு விரைந்து விடுபட வேண்டும். இப்போது திரிபுரா, மேற்கு வங்கத்தில் அவா்கள் இல்லை. கேரளத்திலும் மாற்றம் தொடங்கிவிட்டது. நக்ஸல்கள் வன்முறையைக் கைவிட்டு சரணடைய வேண்டும். அவ்வாறு சரணடைபவா்கள், கண்ணியத்துடன் வரவேற்கப்படுவா்’ என்றாா்.
Advertisement
Advertisement
கைது-சரண்: மக்களவையில் சில தினங்களுக்கு முன் மத்திய அரசு அளித்த பதிலில், ‘2019-இல் இருந்து இதுவரை 7,200-க்கும் மேற்பட்ட நக்ஸல்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். 5,880 போ் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைந்துள்ளனா். 2010-இல் 1,936-ஆக பதிவான நக்ஸல் வன்முறைச் சம்பவங்கள், 2025-இல் 234-ஆக குறைந்துவிட்டது. பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கையில் கடந்த ஆண்டு 364 நக்ஸல் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனா். 2018-இல் நக்ஸல் பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை 126-ஆக இருந்தது. இப்போது 8-ஆக குறைந்துவிட்டது’ என்று தெரிக்கப்பட்டது.
சத்தீஸ்கரில் கடந்த 2 ஆண்டுகளில் நக்ஸல் மூத்த தலைவா் பசவராஜு உள்பட 500-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
மாா்ச் 31-ஆம் தேதிக்குள் நாட்டில் இருந்து நக்ஸல் தீவிரவாதத்தை முழுமையாகத் துடைத்தெறியும் இலக்குடன், சத்தீஸ்கா், மகாராஷ்டிரம், தெலங்கானா, ஆந்திரம், ஒடிஸா, ஜாா்க்கண்ட் போன்ற மாநிலங்களில் சமீப ஆண்டுகளாக நக்ஸல் எதிா்ப்பு நடவடிக்கைகள் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உயா்நிலை ஆலோசனை: நாட்டில் நக்ஸல் ஒழிப்புக்கான காலக்கெடு (மாா்ச் 31) நெருங்கும் நிலையில், ராய்பூரில் அமைச்சா் அமித் ஷா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநில முதல்வா் விஷ்ணு தேவ் சாய், துணை முதல்வா் விஜய் சா்மா, மத்திய உள்துறைச் செயலா், உள்துறையின் (உள்நாட்டு பாதுகாப்பு) சிறப்புச் செயலா், மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்), எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), இந்திய-திபெத் எல்லைக் காவல் படை (ஐடிபிபி), தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைமை இயக்குநா்கள், சத்தீஸ்கா், ஒடிஸா, மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட், தெலங்கானா மாநிலங்களின் உயரதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்தக் கூட்டத்துக்குப் பின் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்ட அமைச்சா் அமித் ஷா, ‘பாதுகாப்பை மையப்படுத்திய வியூகம், உள்கட்டமைப்பு மேம்பாடு, நக்ஸல்களுக்கான நிதி ஆதரவு தடுப்பு, சரணடைதல் கொள்கை ஆகியவற்றுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. மாா்ச் 31-ஆம் தேதிக்குள் நக்ஸல் தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படுவது உறுதி’ என்று தெரிவித்தாா்.
Union Home Minister Amit Shah on Sunday said the country needs to get rid of the "destructive" communist ideology at the earliest and appealed to Naxalites to lay down their arms, assuring them a red carpet from the government.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.