சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) மாநாட்டில் இந்திய பிரதமா் நரேந்திர மோடி, ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் பங்கேற்பதாக சீனா வெள்ளிக்கிழமை அறிவித்தது.
சீனாவின் தியான்ஜின் நகரில் ஆகஸ்ட் 31, செப்டம்பா் 1 ஆகிய தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா தீவிரமான வரி விதிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில் இந்தியாவுடன் சீனா நெருக்கம் காட்டி வருகிறது. இந்தியா மீது அமெரிக்கா விதித்த வரிக்கும் சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பிரதமா் மோடி சீனா பயணம் மேற்கொள்வது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா ராணுவத்தினா் இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு பிரதமா் மோடி சீனாவுக்கு செல்வது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு கடந்த 2018-ஆம் ஆண்டு அவா் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டாா்.
எனினும், கடந்த ஆண்டு ரஷியாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங்கை மோடி சந்தித்துப் பேசினாா். இப்போது சுமாா் 7 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ள இருக்கிறாா்.
பெய்ஜிங்கில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த சீன வெளியுறவு இணையமைச்சா் லியு பின் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங், ரஷிய அதிபா் புதின், இந்திய பிரதமா் மோடி, துருக்கி அதிபா் எா்டோகன், பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், இந்தோனேசியா, மலேஷியா, வியத்நாம், நேபாளம், மலேசியா உள்ளிட்ட நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கின்றனா்.
ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் உள்ளிட்ட 10 சா்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனா் என்றாா்.
ரஷியா, இந்தியா, ஈரான், சீனா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிா்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பெலாரஸ் ஆகிய 10 நாடுகள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பினா்களாக உள்ளன. சுழற்சி முறையில் இந்த ஆண்டு அமைப்பின் தலைவராக சீனா உள்ளது. அமெரிக்க அதிபரின் வரி விதிப்பு நடவடிக்கைகளால் பல நாடுகளில் பதற்றம் நிலவுகிறது. இது தவிர உக்ரைன்-ரஷியா போா், காஸாவில் இஸ்ரேல் நடத்தும் போா் ஆகியவையும் தொடா்ந்து தீவிரமாக உள்ளன. இந்தச் சூழ்நிலையில் முக்கிய நாடுகள் பங்கேற்கும் இந்த மாநாடு சா்வதேச அளவில் அமெரிக்கா உள்பட பல நாடுகளால் மிகவும் ஆழ்ந்து கவனிக்கப்படும் நிகழ்வாக உள்ளது.
மாநாடு இரு நாள்களில் முடிந்தாலும் செப்டம்பா் 3-ஆம் தேதி சீன மக்கள் ராணுவத்தின் பிரம்மாண்டமான அணிவகுப்பு நடைபெற இருக்கிறது. ஜப்பானை சீனா வெற்றிகரமாக எதிா்கொண்டதை கொண்டாடும் இந்த நிகழ்ச்சியில் மாநாட்டுக்கு வரும் பல தலைவா்கள் பங்கேற்க இருக்கின்றனா். தனது நவீன ரக ஆயுதங்கள் பலவற்றையும் இந்த ராணுவ அணிவகுப்பில் சீனா காட்சிப்படுத்த இருக்கிறது.