ஜனநாயகத்தின்படி செயல்படுபவர்கள் நாங்கள் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
மழைக்கால கூட்டத் தொடா் கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கியதில் இருந்தே பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்த விவகாரத்தை முன்வைத்து, எதிா்க்கட்சிகள் தொடா் அமளியில் ஈடுபட்டன. அமளியால் மழைக்கால கூட்டத் தொடரில் 21அமா்வுகளில், மக்களவையில் 120 மணிநேர பணிக்கு திட்டமிடப்பட்ட நிலையில், வெறும் 37 மணிநேரம் 7 நிமிஷங்களே செயல்பட்டுள்ளது. மாநிலங்களவை 41 மணிநேரம் 15 நிமிஷங்களே செயல்பட்டுள்ளது.
இந்த நிலையில், இது குறித்து, நாடாளுமன்ற விவகாரம் மற்றும் சிறுபான்மையினர் நலன் ஆகிய துறைகளுக்கான மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குறிப்பிடுகையில்: "அரசு எதிர்க்கட்சிகள் கருத்துகளையும் கேட்டே செயல்படும். ஆனால், ஒருபோதும் நாட்டின் நலன் சார்ந்த விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ளாது.
நாட்டின் பாதுகாப்புக்காக உழைக்கிறோம் நாங்கள். நீங்கள் (எதிர்க்கட்சிகள்) சிறப்பு தீவிர திருத்தம் (பிகார் வாக்காளர் பட்டியல் விவகாரம்) குறித்து அறிவீர்கள். நாடாளுமன்றச் செயல்பாடுகளை எதிர்க்கட்சிகள் அதிகமாக முடக்கியுள்ளன.
நாங்கள் ஜனநாயக மாந்தர்கள்; ஜனநாயக முறையிலேயே செயல்படுகிறோம். ஆகையால், கூட்டத்தொடரின் முதல் 3 வாரங்களில் நாங்கள் எந்தவொரு மசோதாவையும் தாக்கல் செய்யவில்லை.
நாடாளுமன்ற விவாதங்களில் கலந்துகொள்ள வேண்டுமென்பதை எதிர்க்கட்சிகளிடம் ஒவ்வொரு நாளும் நாங்கள் வலியுறுத்துகிறோம். அரசு ஒரு முக்கியமான மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது. அப்படியிருக்கையில், விவாதத்தில் பங்கேற்று கருத்துகளை வழங்கி உங்கள் தரப்பு பங்களிப்பை வழங்குங்கள்.
எதிர்க்கட்சிகளிடமிருந்தும் கருத்துகளைக் கேட்க நாங்கள் விருப்பப்படுகிறோம். அவர்களிடம் திரும்பத்திரும்ப நாங்கள் வலியுறுத்திவிட்டோம், ஆனால் அவர்கள் அதனைக் கேட்பதாயில்லை” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.