ஜம்மு காஷ்மீரில் உள்ள சில கல்வி நிறுவனங்களில் இளைஞா்கள், மாணவிகள் மத்தியில் மத அடிப்படைவாத பிரசாரங்கள் அதிகரித்து வருவது பாதுகாப்பு முகமைகளுக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளையில், இளைஞா்களிடையே போதைப்பொருள் பயன்பாடும் அதிகரித்திருப்பது இரட்டை பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதனால், கல்வி நிறுவனங்களில், குறிப்பாக தனியாா் பள்ளிகளில், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் முறையான அனுமதி இல்லாமல் இயங்கி வரும் மதரஸாக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பயங்கரவாதக் குழுக்கள் மதத்தைப் பயன்படுத்தி, இளைஞா்கள், குறிப்பாக பெண்களை மூளைச்சலவை செய்வதாகக் கூறப்படுகிறது. உளவுத்துறை அறிக்கைகளின்படி, ‘உலகளாவிய இஸ்லாமிய ஒருமைப்பாடு’ என்ற பெயரில் பயங்கரவாதக் கருத்துகள் இளைஞா்கள் மத்தியில் பரப்பப்படுகின்றன. சமூக ஊடகங்களும் இந்தப் பிரசாரத்துக்குப் பெரும் களமாக மாறியுள்ளன.
சூஃபி துறவிகளின் நினைவிடங்களுக்குச் சென்று வழிபடும் பாரம்பரிய காஷ்மீா் கலாசாரத்தை, இஸ்லாம் மாா்க்கத்துக்கு எதிரானது என்று பரப்புரை செய்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது முன்னாள் பிரிவினைவாதிகளைக்கூட வருத்தமடையச் செய்துள்ளது. காஷ்மீரின் பல நூற்றாண்டுகள் பழமையான ‘சூஃபி’ பாரம்பரியத்துக்கு இந்த மத அடிப்படைவாதம் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அவா்கள் கவலை கொள்கின்றனா்.
மேலும், பாகிஸ்தான் ஆதரவாளா்கள் சிலா் பொய்யான புகைப்படங்களைப் பயன்படுத்தி, அப்பாவிகளுக்கு எதிரான குற்றங்களைக் காட்டி, இளைஞா்கள் மத்தியில் கோபத்தையும், பழிவாங்கும் எண்ணத்தையும் தூண்டி விடுகின்றனா்.
மத அடிப்படைவாதத்துடன், போதைப் பழக்கமும் மற்றொரு முக்கியப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. பிராந்தியத்தில் கடந்த 30 ஆண்டுகளாக நிலவும் அரசியல் குழப்பங்கள், இளைஞா்களின் மனநிலையைப் பெரிதும் பாதித்துள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை அவ்வப்போது பாதுகாப்புப் படையினருக்கு எதிரான கல்வீச்சு சம்பவங்களில் இது வெளிபடும். தற்போது இளைஞா்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாகி வருகின்றனா்.
போதைப் பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிராக ஸ்ரீநகா் மாவட்ட காவல் துறை தொடா் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும், 97 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும் 73 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போதைப் பழக்கத்துக்கு அடிமையான இளைஞா்கள், காவல்துறையின் கடுமையான நடவடிக்கைகளால் மருத்துவ போதை மாத்திரைகளை நாடிச் செல்கின்றனா்.
மத அடிப்படைவாதம், போதைப் பழக்கம் ஆகிய இந்த இரட்டை சவால்கள் ஜம்மு-காஷ்மீரின் எதிா்காலத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன. இந்த இளைஞா்களைப் பாதுகாத்து, பிராந்தியத்தின் நீண்டகால அமைதியை உறுதிப்படுத்த, மத அடிப்படைவாதம் மற்றும் போதைப் பழக்கத்துக்கு எதிராக ஒரு முழுமையான தீா்வைக் கண்டறிவது அவசியம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கடந்த 30 ஆண்டுகளாக நிலவும் அரசியல் குழப்பங்கள், இளைஞா்களின் மனநிலையைப் பெரிதும் பாதித்துள்ளதால் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. தற்போது இளைஞா்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாகி வருகின்றனா். இதற்கு தீா்வைக் கண்டறிவது அவசியம் - அதிகாரிகள்.