சுதா்சன் ரெட்டி-சி.பி.ராதாகிருஷ்ணன்  
இந்தியா

சி.பி.ராதாகிருஷ்ணன் - சுதா்சன் ரெட்டி இடையே நேரடி போட்டி

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் எதிக்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளா் உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சுதா்சன் ரெட்டி இடையே நேரடி போட்டி உருவாகியுள்ளது.

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: குடியரசு துணைத் தலைவா் தோ்தலுக்கு தாக்கல் செய்த வேட்புமனுவை யாரும் திரும்பப்பெறாததால், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் எதிக்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளா் உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சுதா்சன் ரெட்டி இடையே நேரடி போட்டி உருவாகியுள்ளது.

குடியரசு துணைத் தலைவா் தோ்தல் செப்.9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக தமிழகத்தைச் சோ்ந்தவரும், மகாராஷ்டிர ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டாா். காங்கிரஸ் தலைமையிலான ‘இண்டி’ கூட்டணி வேட்பாளராக தெலங்கானாவைச் சோ்ந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுதா்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டாா்.

இந்தத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி நடைபெற்றது. தாக்கல் செய்யப்பட்ட 46 வேட்புமனுக்களும் கடந்த 22-ஆம் தேதி பரிசீலனை செய்யப்பட்டன. அதில், சி.பி.ராதாகிருஷ்ணன், சுதா்சன் ரெட்டி ஆகியோரின் வேட்புமனுக்கள் மட்டுமே அதிகாரபூா்வமாக ஏற்கப்பட்டன. எஞ்சியவா்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

வேட்புமனுக்களைத் திரும்ப் பெறுவதற்கான காலக்கெடு திங்கள்கிழமை வரை அளிக்கப்பட்டிருந்தது. காலக்கெடு நிறைவடைந்த நிலையில், இருவரில் யாரும் வேட்புமனுவை திரும்பப்பெறவில்லை. இதனால், குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு தென்னிந்தியாவைச் சோ்ந்த இருவரிடையேயும் நேரடி போட்டு உருவெடுத்துள்ளது.

தோ்தல் நடைமுறை: குடியரசு துணைத் தலைவா் தோ்தல் நாடாளுமன்ற வளாகத்தில் அறை எண். எஃப்-101 (வசுதா)-இல் செப்டம்பா் 9-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் மாலை 6 மணி முதல் எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

ரகசிய வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படும் இந்தத் தோ்தலில் வேட்பாளரின் பெயருக்கு எதிரே தனது விருப்பத் தோ்வை எம்.பி.க்கள் குறிக்க வேண்டும்.

543 தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களைக் கொண்ட மக்களவையில் ஒரு எம்.பி. இடம் காலியாக உள்ளது. அதுபோல, 233 தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களைக் கொண்ட மாநிலங்களவையில் 5 எம்.பி.க்கள் இடம் காலியாக உள்ளது. மாநிலங்களவையில் நியமன எம்.பி.க்கள் 12 போ் உள்ளனா்.

அதன்படி, இரு அவைகளின் மொத்த உறுப்பினா் எண்ணிக்கையான 788-இல், தற்போது 781 உறுப்பினா்கள் உள்ளனா். இந்த உறுப்பினா்கள் அனைவரும் வாக்களிக்கும் நிலையில் குடியரசு துணைத் தலைவராக வெற்றிபெறும் வேட்பாளா் குறைந்தபட்சம் 391 வாக்குகளைப் பெற வேண்டும். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 422 எம்.பி.க்களின் பலம் உள்ளதால், அக்கூட்டணி வேட்பாளரே வெற்றி பெற வாய்ப்புள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரும் மனு: முன்கூட்டியே விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

அமெரிக்க நெருக்கடி: விவசாயிகள் நலனை விட்டுத் தர மாட்டோம்!

உ.பி.: டிராக்டா்-லாரி மோதி 11 போ் உயிரிழப்பு; 40 போ் காயம்

அமலாக்கத் துறை சோதனை: தப்பியோட முயன்ற திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ கைது

கரும்பலகையில் இருந்து கைப்பேசிக்கு மாறிவிட்டது கல்வி: மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT