கோப்புப்படம் IANS
இந்தியா

சிஆர்பிஎஃப், ராணுவ, மத்திய அரசு அதிகாரிகளுடன் தொடர்பிலிருந்த பாகிஸ்தான் உளவாளி: தகவல்கள்

சிஆர்பிஎஃப், ராணுவ, மத்திய அரசு அதிகாரிகளுடன் பாகிஸ்தான் உளவாளி தொடர்பிலிருந்ததாகத் தகவல்கள் வெளியாகின.

இணையதளச் செய்திப் பிரிவு

ரகசிய தகவல்களைப் பெறுவதற்காக, சிஆர்பிஎஃப் உதவி துணை-ஆய்வாளர் மோதி ராம் ஜத் உடன் தொடர்பிலிருந்த பாகிஸ்தான் உளவாளியிடம் இந்திய ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையுடன் தொடர்புடைய மேலும் 15 பேரின் தொலைபேசி எண்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்காக உளவு வேலை பார்த்ததாகக் கூறி கடந்த மே 27ஆம் தேதி மோதி ராம் தேசிய புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார். இவர் கடந்த 2023ஆம் ஆண்டு முதல், இந்தியாவிலிருந்து மிக முக்கிய தகவல்களை பாகிஸ்தான் புலனாய்வு அதிகாரிகளுக்குக் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த விசாரணையின்போது, தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் நடத்தப்பட்ட சோதனைகளின்போது, மோதி ராம் மட்டுமல்லாமல், சலீம் அகமது என்று அடையாளம் காணப்படும் பாகிஸ்தான் உளவாளியிடம் இந்திய ராணுவத்துக்குத் தொடர்புடைய மேலும் 15 பேரின் தொலைபேசி எண்களும் இருந்துள்ளன.

அந்த தொலைபேசி எண்களின், அழைப்பு விவரங்களையும், இணையதள பயன்பாட்டு விவரங்களையும் பதிவு செய்து ஆராய்ந்தபோது, அதில் நான்கு பேர் இந்திய ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், நான்கு பேர் துணை ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் ஏழு பேர், மத்திய அரசில் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ராம் மோதியுடன் தொடர்பில் இருந்த அந்த பாகிஸ்தான் உளவாளி பயன்படுத்திய தொலைபேசி எண்ணுக்கான சிம் கார்டு, கொல்கத்தாவில் வாங்கப்பட்டது. அந்த கொல்கத்தா நபர், 2007 இல் ஒரு பாகிஸ்தானியரை மணந்து, 2014 இல் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்திருக்கிறார். அதன்பிறகு அவர் ஒரு வருடத்துக்கு இரண்டு முறை கொல்கத்தாவுக்கு வந்து சென்றுள்ளார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெளியாகியிருக்கும் தகவல்களின்படி, ராம் மோதி, லாகூரில் உள்ள பாகிஸ்தான் உளவாளிக்கு மிக முக்கிய ஆவணங்களை அனுப்பியிருப்பதும், அதற்காக அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை ரூ.12 ஆயிரம் வழங்கப்பட்டிருப்பதும், இந்த பணம், தில்லி, மகாராஷ்டிரம், ஹரியாணா என பல இடங்களிலிருந்து, ராம் மோதி மற்றும் அவரது மனைவியின் வங்கிக் கணக்குகளுக்கு செலுத்தப்பட்டிருப்பதும் தெரிய வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பணம் அனுப்பியவர்களில் ஒருவரான ஷாஜாத், மே மாதம் உத்தரபிரதேசத்தில் கைது செய்யப்பட்டார், அவர் எல்லை தாண்டி ஆடைகள், மசாலாப் பொருள்கள் மற்றும் அழகுசாதனப் பொருள்களை கடத்தி வந்ததாகவும், அந்த வேலையின் போது ஐஎஸ்ஐ அமைப்பினருக்கு, இந்தியாவின் மிக முக்கிய ரகசிய தகவல்களை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

இதில் குறிப்பிடத்தக்க விஷயமாக, பஞ்சாபிலிருந்து தில்லிக்கு ரயிலில் வந்தபோது, சக பயணி, ஒரு குடும்ப உறுப்பினருக்கு பணம் அனுப்புமாறு கேட்டுக்கொண்டதால், ​ தான், ராம் மோதிக்கு ரூ.3,500 பரிமாற்றம் செய்ததாக ஷாஜாத் கூறியுள்ளார். ஆன்லைன் பரிவர்த்தனை செய்ய சக பயணி தனக்கு ரூ.3,500 ரொக்கமாக வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

சண்டிகரை தலைமையிடமாகக் கொண்ட ஒரு தொலைக்காட்சி சேனலில் பத்திரிகையாளராக இருக்கும் ஒரு பெண் தன்னை முதலில் தொடர்பு கொண்டதாக ராம் மோதி கூறியிருக்கிறார். மெல்ல அவர் நட்புடன் பழகி வந்ததாகவும், பிறகுதான், சில முக்கிய ஆவணங்களை அவருக்கு பகிர்ந்துகொண்டதாகவும் மோதி ராம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

பிறகு, பாகிஸ்தான் அதிகாரி என்று தன்னை அடையாளம் காட்டிக்கொண்ட நபர், ஒருவரும் எங்கள் பேச்சில் இணைந்துகொண்டதாகவும், பிறகு நேரடியாக ஆவணங்களை அவருக்கே அனுப்பியதாகவும் மோதி ராம் கூறியிருக்கிறார்.

அதன்படி, பாதுகாப்புப் பணியில் வீரர்களை அமர்த்துவது, பாதுகாப்புப் படையின் வாட்ஸ்ஆப் குழுக்களில் வெளியிடப்படும் தகவல்களை பகிர்ந்துகொள்வது, படைகள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு செல்வது தொடல்பான தகவல்கள்,, பயங்கரவாதிகளின் நடமாட்டம் குறித்து வரும் தகவல்களையும் மோதி ராம் பகிர்ந்துகொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திட்டமிட்டதற்கு முன்பே பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சோதனை நிறைவு!

பிகாரில் வெற்றி, தோல்வி அடைந்த தொகுதிகளைப் பிரித்து 243 தொகுதிகளிலும் பாஜக ஆலோசனைக் கூட்டம்!

அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

திவால் வழக்கில் நீதிபதி விலகல்: ஒரு தரப்பிடமிருந்து அழுத்தம் வந்ததாகப் புகார்!

16 வயதில் சாதனை படைத்த லிவர்பூல் வீரர்!

SCROLL FOR NEXT