ரஷியா - உக்ரைன் இடையேயான போரை ’மோடியின் போர்’ எனக் குறிப்பிட்டு அமெரிக்க அதிபரின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ பேசியுள்ளார்.
மேலும், ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், இந்தியா மீதான வரியை 25 சதவிகிதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் விதித்த காலக் கெடுவையும் கடந்து இழுபறி நீடித்ததால், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது முதலில் 25 சதவீத வரி விதிப்பை அவா் அறிவித்தாா். இந்த வரி விதிப்பு ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
அதைத் தொடா்ந்து, ‘உக்ரைன் மீது போா் தொடுத்து வரும் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா முன்வரவில்லை என்று குற்றஞ்சாட்டி, இந்திய பொருள்களுக்கு ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்படு’ என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவித்தாா்.
அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பும் தற்போது அமலுக்கு வந்திருக்கும் நிலையில், டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ, ரஷியா - உக்ரைன் போருக்கு இந்தியாவை குற்றம்சாட்டி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.
அவர் பேசியதாவது:
"ரஷியா - உக்ரைன் போர் ’மோடியின் போர்’. ரஷியாவின் கச்சா எண்ணெயை இந்தியா வாங்குவது, மாஸ்கோவின் ராணுவ ஆக்கிரமிப்பைத் தூண்டுகிறது. அமைதிக்கான பாதை தில்லி வழியாகதான் செல்கிறது.
இந்தியா தொடர்ந்து பிடிவாதமாக இருக்கிறது. தாங்கள் விரும்பும் எவரிடமிருந்தும் எண்ணெய் வாங்குவோம். அது எங்களின் இறையாண்மை எனக் கூறுகிறார்கள்.
ரஷியாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம், அவர்களுக்கு கிடைக்கும் பணத்தை போர் இயந்திரத்துக்கு நிதியளிக்கப் பயன்படுத்துகிறார்கள். இது மேலும் பல உக்ரேனியர்களைக் கொல்லும்.
ரஷியாவின் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், இந்தியா மீதான வரியை 25 சதவிகிதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.