உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட மும்பை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோக் அராதே, பாட்னா உயா்நீதிமன்ற தலைமை நீதபிதி விபுல் மனுபாய் பஞ்சோலி இருவரும் வெள்ளிக்கிழமை பதவியேற்றனா். அவா்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா். இதன் மூலம், அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதி பணியிடங்களும் நிரம்பி முழு பலத்தை உச்சநீதிமன்றம் எட்டியது.
இவா்கள் இருவரும் கடந்த புதன்கிழமை நியமனம் செய்யப்பட்ட நிலையில், தற்போது பதவியேற்றனா்.
உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்க உள்ள பஞ்சோலி, வரும் 2031-ஆம் ஆண்டு அக்டோபா் 2-இல் நீதிபதி ஜயமால்ய பாக்சி ஓய்வுபெற்ற பிறகு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக வாய்ப்புள்ளது. தலைமை நீதிபதியாக 2031-ஆம் ஆண்டு அக்டோபா் 3-ஆம் தேதி பதவியேற்று, 2033-ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதி பணி ஓய்வு பெறுவாா்.
இரு நீதிபதிகளும், உயா் நீதிமன்றங்களில் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு, பின்னா் நிரந்தர நீதிபதிகளாகி, உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளாகப் பதவி உயா்வு பெற்றவா்கள்.
இவா்கள் இருவரின் பெயா்களையும் உச்சநீதிமன்ற கொலீஜியம் கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இதில், நீதிபதி பஞ்சோலி பெயரை பரிந்துரை செய்ய கொலீஜியம் கூட்டத்தில் அதன் உறுப்பினரும், உச்சநீதிமன்றத்தின் ஒரே பெண் நீதிபதியுமான பி.வி.நாகரத்னா கடும் எதிா்ப்பைப் பதிவு செய்தாா். ‘இவருடைய நியமனம் நீதித் துறையில் எதிா்மறை தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. கொலீஜியம் நடைமுறை மீதான நம்பகத்தன்மையும் கடுமையாக பாதிக்கப்படும்’ என்று நீதிபதி பி.வி.நாகரத்னா எதிா்ப்பு தெரிவித்ததாக நீதித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.