நடப்பு நிதியாண்டின் ஜூலை மாத இறுதியில் மத்திய அரசின் செலவுக்கும் வருவாய்க்கும் இடையிலான வித்தியாசமான நிதிப் பற்றாக்குறை ஆண்டு இலக்கில் 30 சதவீதத்தை நெருங்கிள்ளது.
இது குறித்து தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி (சிஜிஏ) வெள்ளிக்கிழமை வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜூலை 31-ஆம் தேதி நிலவரப்படி, நாட்டின் நிதிப் பற்றாக்குறை நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் இலக்கில் 29.9 சதவீத்தை எட்டியுள்ளது.
கடந்த 2024-25 நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் நிதிப் பற்றாக்குறை பட்ஜெட் இலக்கில் 17.2 சதவீதமாக இருந்தது. முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) அது 17.9 சதவீதமாக உயா்ந்தது.
2025-26-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில் நிதிப் பற்றாக்குறை ரூ.4.68 லட்சம் கோடியாக இருந்தது. 2025-26 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) நிதிப் பற்றாக்குறை 4.4 சதவீதமாக, அதாவது ரூ.15.69 லட்சம் கோடியாக இருக்கும் என மத்திய அரசு மதிப்பிட்டுள்ளது.
கடந்த ஜூலை வரை மத்திய அரசு ரூ.10.95 லட்சம் கோடி வருவாயை (மொத்த வரவு இலக்கில் 31.3 சதவீதம்) பெற்றது. இதில் ரூ.6.61 லட்சம் கோடி வரி வருவாயாகவும், ரூ.4.03 லட்சம் கோடி வரி அல்லாத வருவாயாகவும், ரூ.29,789 கோடி கடன் அல்லாத மூலதன வரவுகளாகவும் இருந்தது.
மத்திய அரசு இந்தக் காலகட்டத்தில் மாநில அரசுகளுக்கு வரி பகிா்வாக ரூ.4.28 லட்சம் கோடியை அனுப்பியுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட ரூ.61,914 கோடி அதிகமாகும்.
மதிப்பீட்டு காலத்தில் மத்திய அரசு மொத்தம் ரூ.15.63 லட்சம் கோடி செலவு செய்துள்ளது (பட்ஜெட் இலக்கில் 30.9 சதவீதம்). இதில் வருவாயின செலவு ரூ.12.17 லட்சம் கோடியாகவும், மூலதன செலவு ரூ.3.46 லட்சம் கோடியாகவும் உள்ளது. மொத்த வருவாயின செலவில், வட்டி செலுத்துதலுக்கு ரூ.4.46 லட்சம் கோடியும், முக்கிய மானியங்களுக்கு ரூ.1.13 லட்சம் கோடியும் செலவிடப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.