ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக நாளை (டிச. 4) இந்தியா வருகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 2 நாள்கள் அரசு முறைப் பயணம் மேற்கொள்ளும் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் இந்திய தலைநகர் புது தில்லிக்கு, நாளை மாலை 4.30 மணியளவில் வந்தடைவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தில்லியில் நாளை இரவு பிரதமர் நரேந்திர மோடி அளிக்கும் விருந்தில் அதிபர் புதின் கலந்துகொள்கிறார். இந்தப் பயணத்தில், இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகள் குறித்த முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்துடன், தில்லியில் வரும் டிச.5 காலை மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ் காட்டில் அதிபர் புதின் மரியாதைச் செலுத்தவுள்ளார்.
இதையடுத்து, தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் வரும் டிச.5 ஆம் தேதி நடைபெறும் 23 ஆவது இந்திய - ரஷிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் ரஷிய அதிபர் புதின் ஆகியோர் கலந்துகொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், அதிபர் புதின் மற்றும் அவருடன் வருகைத் தந்துள்ள ரஷிய அதிகாரிகள் குழுவுக்கும் வெள்ளிக்கிழமை மதியம் பிரதமர் மோடி விருந்தளிப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பயணத்தில், ரஷிய அரசு நடத்தும் ஒளிப்பரப்பாளரின் புதிய இந்திய சேனலையும் அதிபர் புதின் தொடங்கி வைக்கவுள்ளார். பின்னர், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையிலான அரசு விருந்தில் கலந்துகொள்ளும் அதிபர் புதின் வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில் மீண்டும் ரஷியாவுக்கு புறப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ரஷியாவுடன் கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்வதால் இந்திய பொருள்கள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 50 சதவிகிதம் வரி விதித்துள்ளார்.
எனவே, இந்த விவகாரம் குறித்து ரஷிய அதிபர் புதின் பங்கேற்கும் உச்சி மாநாட்டில் பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சத்தீஸ்கரில் 12 நக்சல்கள் சுட்டுக்கொலை! 3 காவல் அதிகாரிகள் பலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.