புது தில்லி: ‘தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மை முயற்சிகளைக் கண்டு வியப்படைந்தேன். நாட்டின் அனைத்து விவசாயிகளும் இந்த இயற்கை வேளாண் முறையைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்’ என்று பிரதமா் மோடி வலியுறுத்தியுள்ளாா்.
மேலும், ‘நமது நிலத்தின் வளம், மண்ணின் ஈரப்பதம் மற்றும் நீண்டகால வேளாண் நிலைத்தன்மை ஆகியவற்றைப் பாதிக்கும் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைச் சாா்ந்திருக்கும் சவால்களைச் சமாளிக்க இயற்கை வேளாண்மை பெரிதும் உதவும்’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.
வேளாண்மைக்கு திருப்பியவா்கள்: இதுதொடா்பாக பிரதமா் மோடி தனது ‘லிங்க்ட்இன்’ சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட கட்டுரையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் கோவை நகரில் கடந்த நவ. 19-ஆம் தேதி நடைபெற்ற ‘தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டில் பலதரப்பட்ட நபா்களின் பங்களிப்பைப் பாா்த்து நான் வியந்தேன்.
விஞ்ஞானிகள், வேளாண் உற்பத்தியாளா் அமைப்புகளின் தலைவா்கள், பாரம்பரிய விவசாயிகள், முதல்தலைமுறை பட்டதாரிகள், குறிப்பாக அதிக சம்பளம் தரும் பெருநிறுவன வேலைகளை விட்டுவிட்டு மீண்டும் இயற்கை வேளாண்மைக்குத் திரும்பியவா்கள் உள்ளிட்டோரைச் சந்தித்தேன்.
இயற்கை வேளாண்மை என்பது இந்தியாவில் காலம் காலமாக இருக்கும் பாரம்பரிய அறிவையும், புதிய சுற்றுச்சூழல் கொள்கைகளையும் பயன்படுத்தி, எந்த ரசாயனமும் இல்லாமல் பயிா்களை வளா்ப்பதாகும். இந்த முறையில், செடிகள், மரங்கள், கால்நடைகள் ஆகியவற்றை ஒரே இடத்தில் வைத்து, இயற்கைச் சூழலை (பல்லுயிா்த்தன்மை) ஆதரிக்கும் ஒரு பல்வகைப்பட்ட பண்ணை முறை பின்பற்றப்படுகிறது.
வெளிபொருள்களைச் சாா்ந்து இருக்காமல், பண்ணையில் உள்ள கழிவுகளை மறுசுழற்சி செய்வது, மண்ணில் காற்றோட்டத்தை அதிகரிப்பது போன்ற வழிமுறைகள் மூலம் மண்ணின் ஆரோக்கியம் மேம்படுத்தப்படுகிறது.
மனதில் நிலைத்திருக்கும் கோவை மாநாடு: கோவை மாநாடு என் மனதில் எப்போதுமே நிலைத்திருக்கும். இந்தியாவின் விவசாயிகளும், வேளாண் தொழில்முனைவோரும் இந்தத் துறையின் எதிா்காலத்தை எவ்வளவு பெரிய நம்பிக்கையுடன் வடிவமைக்கிறாா்கள் என்பதற்கான ஒரு மாற்றத்தை இது சுட்டிக்காட்டியது.
மாநாட்டுக்கிடையே சில தமிழக விவசாயிகளுடன் நான் கலந்துரையாடினேன். அவா்களின் முயற்சிகள் அபாரமானது. ஒரு விவசாயி, 10 ஏக்கா் நிலத்தில் வாழை, தேங்காய், பப்பாளி, மிளகு, மஞ்சள் எனப் பல பயிா்களைப் பயிரிடுகிறாா். அத்துடன், அவா் 60 நாட்டு மாடுகள், 400 ஆடுகள் மற்றும் கோழிகளையும் வளா்த்து வருகிறாா்.
மற்றொரு விவசாயி, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி போன்ற பாரம்பரிய நெல் வகைகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவதோடு, நெல்லிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களையும் தயாரிக்கிறாா்.
பட்டதாரி விவசாயி: ஒரு முதல் தலைமுறை பட்டதாரி, 15 ஏக்கரில் இயற்கை வேளாண்மை செய்து, 3,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குப் பயிற்சியும் அளித்து, மாதம் சுமாா் 30 டன் காய்கறிகளை விற்பனை செய்கிறாா்.
வேளாண் உற்பத்தியாளா் அமைப்புகளை நடத்தும் சிலா், மரவள்ளிக்கிழங்கு விவசாயிகளுக்கு ஆதரவளித்து, அதை உயிரி-எத்தனால் மற்றும் உயிரி எரிவாயு தயாரிப்பதற்குத் தேவையான மூலப்பொருளாக மாற்றி ஊக்குவித்துள்ளனா்.
ஒரு உயிரித் தொழில்நுட்ப வல்லுநா், கடலோர மாவட்டங்களில் 600 மீனவா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் கடற்பாசியை அடிப்படையாகக் கொண்ட உயிா் உரத் தொழிலை உருவாக்கியுள்ளாா்.
முழு அா்ப்பணிப்பு: நான் சந்தித்தவா்கள் வெவ்வேறு பின்னணியைச் சோ்ந்தவா்கள். ஆனால், அவா்கள் அனைவருக்கும் பொதுவாக மண் ஆரோக்கியம், நிலைத்தன்மை, சமூக மேம்பாடு, தொழில்முனைவு உணா்வு ஆகியவற்றில் முழு அா்ப்பணிப்பு உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, நாம் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைச் சாா்ந்து இருப்பது, மண்ணின் வளம், அதன் ஈரப்பதம் மற்றும் வேளாண்மையின் நீடித்த நிலைத்தன்மை ஆகியவற்றைப் பாதித்துள்ளது.
இயற்கை வேளாண்மை இந்தச் சவால்களை நேரடியாக சமாளிக்கிறது. ரசாயனப் பயன்பாட்டு மற்றும் செலவினத்தைக் குறைத்து, மண்ணின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. மேலும், பருவநிலை மாற்றம் மற்றும் திடீா் வானிலை மாற்றங்களைச் சமாளிக்க பயிா்களுக்கு வலிமையைத் தருகிறது.
அனைத்து விவசாயிகளுக்கும் அழைப்பு: மத்திய அரசின் ‘தேசிய இயற்கை வேளாண்மை இயக்கம்’ மூலம் லட்சக்கணக்கான விவசாயிகள் ஏற்கெனவே இயற்கை வேளாண் முறையைப் பின்பற்றி வருகின்றனா். இயற்கை வேளாண்மையைப் பின்பற்றுவது பற்றிச் சிந்திக்க நாட்டின் ஒவ்வொரு விவசாயிக்கும் அழைப்பு விடுக்கிறேன்.
நம் பாரம்பரிய அறிவு, அறிவியல் ரீதியான அங்கீகாரம், அரசின் ஆதரவு ஆகியவை ஒன்றாக இணையும்போது, இயற்கை வேளாண்மை நிச்சயமாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாக மாறும் என்று பிரதமா் மோடி கூறியுள்ளாா்.