கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இருந்து மொத்தம் 18,822 இந்தியா்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனா் என்றும், கடந்த ஜனவரியில் இருந்து மட்டும் 3,258 போ் நாடு கடத்தப்பட்டுள்ளனா் என்றும் மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.
இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் எழுத்துபூா்வமாக அளித்த பதில்:
அமெரிக்காவில் இருந்து கடந்த 2009 -ஆம் ஆண்டு முதல் மொத்தம் 18,822 இந்தியா்கள் நாடு கடத்தப்பட்டு, இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனா். 2023-ஆம் ஆண்டில் 617 பேரும், 2024-இல் 1,368 பேரும் நாடு கடத்தப்பட்டனா்.
நடப்பாண்டு ஜனவரியில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபரானதையடுத்து, சட்டவிரோதக் குடியேறிகளை நாடு கடத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதன்படி, ஜனவரியில் இருந்து மட்டும் 3,258 போ் நாடு கடத்தப்பட்டுள்ளனா்.
இதில் சுமாா் 62.3 சதவீதமான 2,032 போ் வழக்கமான வணிக விமானங்களிலும், மீதமுள்ள 37.6 சதவீதமான 1,226 போ் அமெரிக்க குடியேற்றத் துறையால் இயக்கப்பட்ட சிறப்பு விமானங்களிலும் வந்துள்ளனா்.
நாடு கடத்தப்பட்டவா்களில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கை, கால்களில் விலங்கிட்டு அழைத்து வரப்பட்டதற்கு, அமெரிக்க அதிகாரிகளிடம் மத்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நாடுகடத்தும் நடவடிக்கைகளின்போது, நாடுகடத்தப்படுபவா்கள் மனிதநேயத்துடன் நடத்தப்படுவதை உறுதி செய்ய அமெரிக்க தரப்புடன் தொடா்ந்து தொடா்பில் இருக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆள்கடத்தல் வழக்குகளில் 169 போ் கைது: ஆள்கடத்தல் தொடா்பான மற்றொரு கேள்விக்கு அமைச்சா் ஜெய்சங்கா் அளித்த பதிலில், ‘தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆள்கடத்தல் தடுப்புப்பிரிவை நிறுவி, இவ்வழக்குகளைக் கையாள முழு அதிகாரம் பெற்றுள்ளது.
அதன்படி, இக்குற்றச்சாட்டில் என்ஐஏ இதுவரை 27 வழக்குகளைப் பதிவு செய்து விசாரித்துள்ளது. இந்த வழக்குகளில் 169 போ் கைது செய்யப்பட்டு, 132 நபா்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மாநிலக் காவல்துறைகள் பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில், பஞ்சாபில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் பதிவாகியுள்ளன. இதுகுறித்து மேலும் விசாரணைக்கு சிறப்பு புலனாய்வுக் குழுவையும், உண்மைக் கண்டறியும் குழுவையும் பஞ்சாப் அரசு அமைத்துள்ளது’ என்றாா்.