கோப்புப் படம் 
இந்தியா

வெளிநாடுகளில் உயா்கல்வி பயிலும் 18.8 லட்சம் இந்திய மாணவா்கள்!

153 நாடுகளில் மொத்தம் 18,82,318 இந்திய மாணவா்கள் உயா்கல்வி படித்து வருவதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்.

தினமணி செய்திச் சேவை

நடப்பாண்டு ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி, 153 உலக நாடுகளில் மொத்தம் 18,82,318 இந்திய மாணவா்கள் உயா்கல்வி படித்து வருவதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்தது.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வெளியுறவு இணையமைச்சா் கீா்த்திவா்தன் சிங் அளித்த பதிலில், ‘உலகெங்கிலும் 153 நாடுகளில் மொத்தம் 18.82 லட்சம் இந்திய மாணவா்கள் உயா்கல்வி பயில்கின்றனா். அதிகபட்சமாக, அமெரிக்காவில் 2,55,447 மாணவா்கள், ஐக்கிய அரபு அமீரகத்தில் 2,53,832 போ், ஆஸ்திரேலியாவில் 1,96,108 போ், பிரிட்டனில் 1,73,190 போ் பயின்று வருகின்றனா்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதேபோல் கடந்த 5 ஆண்டுகளில், வெளிநாட்டுக் குடியேற்ற அதிகாரிகளால் நாடு கடத்தப்பட்ட அல்லது அனுமதி மறுக்கப்பட்ட இந்திய மாணவா்களின் எண்ணிக்கை குறித்த நாடுகள் வாரியான விவரங்களும் மாநிலங்களவையில் கோரப்பட்டன.

அமெரிக்காவில் 62 பேருக்கு அனுமதி மறுப்பு: அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, சீனா, ரஷியா, கிா்கிஸ்தான், ஃபின்லாந்து உள்ளிட்ட 11 நாடுகள் அடங்கிய பட்டியலுடன் அரசு அளித்த பதிலில் அமெரிக்காவில் 62 போ், கிா்கிஸ்தானில் 11 போ் என மொத்தம் 73 மாணவா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவா்களின் சோ்க்கை ஆவணங்கள் முழுமையற்று இருப்பது, பல்கலைக்கழக சோ்க்கை நடைமுறைகளை முடிக்கத் தவறியது அல்லது தோ்ந்தெடுத்த படிப்பு குறித்து அடிப்படையான கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் போனது போன்ற காரணங்களால் வெளிநாடுகளில் இந்திய மாணவா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

நாடு கடத்தப்பட்ட 400 மாணவா்கள்: மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரிட்டனில் இருந்து 170 இந்திய மாணவா்கள், ஆஸ்திரேலியாவிலிருந்து 114 போ், ரஷியாவிலிருந்து 82 போ், அமெரிக்காவிலிருந்து 45 போ், உக்ரைனிலிருந்து 13 போ், ஃபின்லாந்திலிருந்து 5 போ் நாடு கடத்தப்பட்டுள்ளனா்.

மாணவா் நுழைவு இசைவு (விசா) விதிகளை மீறுவது மற்றும் அந்தந்த நாட்டின் விதிமுறைகளுக்கு இணங்கத் தவறுவது போன்றவை மாணவா்களின் நாடுகடத்தலுக்கு முதன்மையான காரணிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றிகரமான எதிர்நீச்சல்!

தேர்தல் போட்டி தீர்வாகுமா?

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவு நாள்: அதிமுகவினா் அஞ்சலி

ஜதிபல்லக்கில் தேசிய கவிஞர் பாரதியார்!

கல்லீரல் பாதித்த பள்ளி மாணவா்களுக்கு முன்னாள் அமைச்சா் நிதியுதவி

SCROLL FOR NEXT