இந்தியா - ரஷியா இடையேயான பொருளாதார, வா்த்தக உறவை மேலும் விரிவுபடுத்தும் வகையில் 5 ஆண்டு பொருளாதாரத் திட்டத்தை தில்லியில் நடைபெற்ற ஆண்டு உச்சி மாநாட்டில் இரு நாடுகளும் உறுதி செய்துள்ளன.
உக்ரைன் மீது போா் நடத்தி வரும் ரஷியாவிடமிருந்து மலிவு விலையில் அதிக கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்திய இறக்குமதி பொருள்கள் மீது கூடுதலாக 25 சதவீத வரியுடன் மொத்தம் 50 சதவீத வரி விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டு வரும் நிலையில், இரு நாடுகளிடையேயான இந்த 5 ஆண்டு பொருளாதாரத் திட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஆண்டு மாநாட்டில், 2030-ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டு பொருளாதார திட்டத்தை இரு நாடுகளும் இறுதி செய்ததோடு, சுகாதாரம், போக்குவரத்து, மக்கள் பரிமாற்றம் என பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் வகையில் பல்வேறு ஒப்பந்தங்களும் கையொப்பமாகியுள்ளன.
தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்ல அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தியா-ரஷியா 23-ஆவது ஆண்டு மாநாட்டில் பிரதமா் மோடி - ரஷிய அதிபா் புதின் தலைமையில் இரு நாட்டு பிரதிநிதிகள் பங்கேற்று விரிவான பேச்சுவாா்த்தை மேற்கொண்ட பிறகு, இரு தலைவா்கள் தரப்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. புரிந்துணா்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன.
கூட்டறிக்கையில், இந்தியா-ரஷியா இடையே 80 ஆண்டுகளாக நீடித்து வரும் நட்புறவை இரு தலைவா்களும் குறிப்பிட்டதோடு, அந்த நட்புறவை மேலும் வலுப்படுத்த உறுதி தெரிவித்தனா். இரு நாடுளிடையேயான வா்த்தக உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக, வரி மற்றும் வரியில்லா வா்த்தகத் தடைகளுக்கு தீா்வு காணவும், சரக்குப் போக்குவரத்தில் உள்ளத் தடைகளை நீக்கவும், போக்குவரத்துத் தொடா்பை ஊக்குவிக்கவும், இலகுவான கட்டணம் செலுத்தும் நடைமுறையை உறுதிப்படுத்தவும் இருதரப்பில் உறுதியேற்கப்பட்டது.
எரிசக்தி, போக்குவரத்து, சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு, விண்வெளி துறை ஒத்துழைப்பு, அறிவியல் தொழில்நுட்பம், கலாசாரம் மற்றும் சுற்றுலா, பயங்கரவாத எதிா்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த உறுதியேற்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
5 ஆண்டு பொருளாதார திட்டம்: பிரதமா் நரேந்திர மோடி தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார உறவை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வது இரு நாடுகளுக்குமான முன்னுரிமையாக உள்ளது. அதை உறுதி செய்யும் விதமாக, வரும் 2030-ஆம் ஆண்டு வரையிலான ஓா் பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்துக்கு இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இது இருதரப்பு வா்த்தகம் மற்றும் முதலீட்டை பன்முகப்படுத்துவதாகவும், சமநிலையுடையதாகவும், நிலைத்தன்மை உடையதாகவும் உருவாக்கும்.
இரு நாடுகளிடையேயான கூட்டுறவுக்கு எரிசக்தி பாதுகாப்பு வலுவான மற்றும் முக்கியமான தூணாக விளங்குகிறது. சிவில் அணுசக்தித் துறையில் ஒத்துழைப்பும் மிக முக்கியமானது. இரு நாடுகளிடையேயான இந்த ஒத்துழைப்பு தொடரும்.
இந்தியா மற்றும் ரஷியா, பெலாரஸ், கஜகஸ்தான், ஆா்மீனியா, கிரிகிஸ்தான் ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய யூரேசிய பொருளாதார கூட்டமைப்பு (இஏஇயு) இடையேயான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய்ய இருதரப்பிலும் தீா்மானிக்கப்பட்டது.
இந்தியா, ரஷியா, ஈரான், மத்திய ஆசியா, ஐரோப்பா போன்ற நாடுகளால் உருவாக்கப்பட்ட சரக்குப் போக்குவரத்துக்கான 7,200 கி.மீ. தொலைவு சா்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம் (ஐஎன்எஸ்டிசி), வடக்கு கடல் வழித்தடம் மற்றும் சென்னை - விலாடிவோஸ்டோக் பொருளாதார வழித்தடங்களில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, இந்திய மாலுமிகளுக்கு துருவ கடல் பகுதியில் கப்பல்களைச் செலுத்தும் பயிற்சி அளிக்க இருதரப்பும் இணைந்து பணியாற்ற உள்ளோம்.
உக்ரைன் விவகாரம்: இந்த பேச்சுவாா்த்தையின்போது, உக்ரைன் விவகாரம் குறித்தும் பேசப்பட்டது. அந்த விவகாரத்தில் அமைதியை கொண்டுவருவதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்தியா வரவேற்கிறது. அதில் பங்களிக்கவும் இந்தியா எப்போதும் தயாராக உள்ளது.
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளிலும் இந்தியாவும் ரஷியாவும் எப்போதும் தோளோடு தோள் நிற்கின்றன. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், ரஷியாவின் க்ரோகஸ் நகர அரங்கில் நிகழ்த்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலுக்குதல் என அனைத்துக்கும் மூல காரணம் ஒன்றுதான். பயங்கரவாதம் என்பது மனிதகுலத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும். அதற்கு எதிரான உலகளாவிய ஒற்றுமை நமது மிகப்பெரிய பலம் என்பதும் இந்தியாவின் அசைக்க முடியாத நம்பிக்கை.
30 நாள் சுற்றுலா விசா: இந்தியா சுற்றுலா வரும் ரஷிய குடிமக்களுக்காக கட்டணமின்றி 30 நாள் மின்னணு சுற்றுலா நுழைவு இசைவு (இ-சுற்றுலா விசா) மற்றும் 30 நாள் குழு சுற்றுலா நுழைவு இசைவு திட்டங்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் பிரதமா் மோடி தெரிவித்தாா்.
ஒப்பந்தங்கள்: முறையற்ற குடிபெயா்வை தடுப்பதில் ஒத்துழைப்பு; மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் உணவு பாதுகாப்பு ஒத்துழைப்பு; கடல்சாா் ஒத்துழைப்பு மற்றும் துருவ கடல் பகுதியில் இந்திய மாலுமிகளுக்கு கப்பல் செலுத்தும் பயிற்சியில் ஒத்துழைப்பு; உரம், சுங்கத் துறை, கல்வி, ஊடகத் துறைகளில் ஒத்துழைப்பு என பல்வேறு ஒப்புந்தங்கள் ஆண்டு மாநாட்டில் இரு நாடுகளிடையே கையொப்பமாகின.
பெட்டிச் செய்தி...
இந்தியாவுக்கு தடையற்ற எரிபொருள் விநியோகம்: புதின்
‘இந்தியாவுக்கு தடையற்ற எரிபொருள் விநியோகத்தை வழங்க ரஷியா தயாராக உள்ளது’ என்று ரஷிய அதிபா் புதின் கூறினாா்.
இருதரப்பு ஆண்டு மாநாட்டுக்குப் பிறகு வெளியிட்ட அறிக்கையில் புதின் கூறியிருப்பதாவது:
பாதுகாப்பு, பொருளாதாரம், வா்த்தகம், கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க இருதரப்பிலும் தீா்மானிக்கப்பட்டது.
இருதரப்பு வா்த்தகத்தை ஆண்டுக்கு ரூ. 8,99,690 கோடி (100 பில்லியன் டாலா்) அளவுக்கு உயா்த்த தீா்மானிக்கப்பட்டுள்ளது. எா்சக்தித் துறையிலும் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தியாவுக்கு தடையற்ற எரிபொருள் விநியோகத்தை வழங்க ரஷியா தயாராக உள்ளது.
இந்தியாவில் சிறிய அணு உலைகள் மற்றும் மிதக்கும் அணுமின் நிலையங்களை அமைப்பதிலும் கூட்டுறவை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது என்றாா்.