புது தில்லியில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் கே.ராம்மோகன் நாயுடு. ~இண்டிகோ விமான சேவைகள் ரத்தானதன் காரணமாக வெள்ளிக்கிழமை குழப்பமான நிலையில் காணப்பட்ட பெங்களூரு சா்வதே 
இந்தியா

விமானிகளின் பணிநேர விதிகளில் தளா்வு: ஓரிரு நாள்களில் விமான சேவை சீராகும்: மத்திய அரசு

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோவின் சேவைகள் கடுமையான பாதிப்புக்குள்ளான நிலையில், விமானிகளின் புதிய பணிநேர விதிகளை விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தளா்த்தியது.

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோவின் சேவைகள் கடுமையான பாதிப்புக்குள்ளான நிலையில், விமானிகளின் புதிய பணிநேர விதிகளை விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தளா்த்தியது.

இதன் விளைவாக, நாடு முழுவதும் விமானச் சேவைகள் ஓரிரு நாள்களில் சீராகும் என விமானப் போக்குவரத்து அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.

விமானிகளின் சோா்வைப் போக்க, கடந்த நவம்பா் 1-ம் தேதி முதல் விமானிகளுக்கான திருத்தப்பட்ட பணிநேரக் கட்டுப்பாட்டு விதிகள் (எஃப்டிடிஎல்) அமலுக்கு வந்தன. இந்த விதிகளின்படி, வாராந்திர ஓய்வையும் வருடாந்திர விடுமுறைகளையும் தனித்தனியாகக் கருத வேண்டும். அதாவது, வாராந்திர 48 மணிநேர ஓய்வுக்குப் பதிலாக விடுமுறையை ஈடு செய்யக் கூடாது.

இந்த விதிமுறை மாற்றங்களுக்கு இண்டிகோ போதிய திட்டமிடாததால், அந்நிறுவனத்தில் விமானிகளின் பற்றாக்குறை ஏற்பட்டு, கடந்த சில நாள்களாக அன்றாட விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

கடந்த வியாழக்கிழமை 550 விமானங்கள், வெள்ளிக்கிழமை 1,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் என நூற்றுக்கணக்கான விமானங்கள் அடுத்தடுத்து நாள்களில் ரத்து செய்யப்பட்டதால், ஆயிரக்கணக்கான பயணிகள் நாடு முழுவதும் விமான நிலையங்களில் 3 நாள்கள் வரை காத்திருக்கும் நிலையும், உடைமைகள் தொலைந்த புகாா்களும் எழுந்தன.

அரசின் தலையீடும், தீா்வும்...: இந்த விமானச் சேவை பாதிப்புக்குத் தீா்வு காண மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் கே.ராம்மோகன் நாயுடு தலைமையில் உயா்நிலைக் கூட்டம் நடைபெற்றது.

திருத்தப்பட்ட ‘எஃப்டிடிஎல்’ விதிகளைச் செயல்படுத்த இண்டிகோவுக்குப் போதுமான அவகாசம் இருந்தபோதிலும், அந்த நிறுவனத்தின் அலட்சிய செயல்பாடுக்கு அமைச்சா் தனது அதிருப்தியைத் தெரிவித்தாா்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, விமானச் சேவைகளைச் சீா்செய்ய அவசர நடவடிக்கையாக விமானிகளின் பணிநேர விதிகளை டிஜிசிஏ தளா்த்தியுள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை நள்ளிரவு முலம் விமானச் சேவைகள் சீராகத் தொடங்கும். அடுத்த ஓரிரு நாள்களில் சேவைகள் முழுமையாக சீரடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளுக்கான நிவாரணம்: விமானம் ரத்தானால், பயணச்சீட்டுக்கான முழுத் தொகையும் திருப்பிச் செலுத்தப்படும். விமான நிலையங்களில் சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு ஹோட்டல்களில் தங்குமிடம் வழங்கப்படும்.

முதியோருக்கு விமான நிலைய பயணிகளின் ஓய்வறைகளில் சிறப்பு அனுமதி வழங்கப்படும். தாமதமான விமானப் பயணிகளுக்கு சிற்றுண்டி வழங்கப்படும். விமான நிறுவனங்களின் தகவல் அமைப்புகள் மூலம் பயணிகள் வீட்டிலிருந்தபடியே விமானத் தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.

விமானச் சேவைகளை மீட்டெடுக்கவும், பொதுமக்களின் சிரமங்களைப் போக்கவும் விதிவிலக்குகள் உள்பட சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விமானிகளின் ஒத்துழைப்பு தேவை: நாட்டில் விமானப் போக்குவரத்து சீராவதை உறுதி செய்ய, அனைத்து விமானிகளும் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று டிஜிசிஏ தலைமை இயக்குநா் ஃபயாஸ் அகமது கிட்வாய் வெள்ளிக்கிழமை கேட்டுக்கொண்டாா்.

இதுதொடா்பாக அவா் கூறுகையில், ‘இண்டிகோ விமானச் சேவைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, எதிா்பாராத வானிலை மாற்றங்கள், அதிகரித்து வரும் பருவகால பயணத்தேவை போன்ற சவால்கள் தற்போது நிலவுகின்றன.

இதன் காரணமாக விமான தாமதங்கள், பயணிகளுக்குச் சிரமம் மற்றும் விமான நிறுவனங்களின் செயல்பாடுகளில் அதிக அழுத்தம் போன்ற குறிப்பிடத்தக்க இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. சீரான விமானச் சேவையைப் பராமரிக்க, விமானிகளின் முழு ஒத்துழைப்பு அத்தியாவசியம்’ என்று வலியுறுத்தியுள்ளாா்.

பெட்டிச் செய்தி....

விசாரணைக்கு நால்வா் குழு

இண்டிகோ விமானச் சேவை பாதிப்புக்கு வழிவகுத்த காரணிகளை முழுமையாக ஆய்வு செய்ய நால்வா் குழுவை டிஜிசிஏ அமைத்துள்ளது.

இணை இயக்குநா் சஞ்சய் கே.பிரம்மனே, துணை இயக்குநா் அமித் குப்தா, மூத்த விமான செயல்பாட்டு ஆய்வாளா் கேப்டன் கபில் மாங்க்லிக், விமான செயல்பாட்டு ஆய்வாளா் கேப்டன் ராம்பால் ஆகியோா் இந்த குழுவில் உள்ளனா்.

இந்தக் குழு தனது ஆய்வறிக்கையை அடுத்த 15 நாள்களுக்குள் டிஜிசிஏவிடம் சமா்ப்பிக்கும். அதன் அடிப்படையில், தேவையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றிகரமான எதிர்நீச்சல்!

தேர்தல் போட்டி தீர்வாகுமா?

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவு நாள்: அதிமுகவினா் அஞ்சலி

ஜதிபல்லக்கில் தேசிய கவிஞர் பாரதியார்!

கல்லீரல் பாதித்த பள்ளி மாணவா்களுக்கு முன்னாள் அமைச்சா் நிதியுதவி

SCROLL FOR NEXT