பணிக் குழு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட இண்டிகோ விமான சேவை சீரடையத் தொடங்கியுள்ளது. ரத்து செய்யப்பட்ட பயணச்சீட்டுகள் அல்லது மிகவும் தாமதமாக விமானங்களை இயக்கியதற்காகப் பயணிகளுக்கு இதுவரை ரூ.610 கோடியை இண்டிகோ நிறுவனம் திருப்பி அளித்துள்ளதாக விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிய விமானப் பணி நேரக் கட்டுப்பாட்டு விதிகள் காரணமாக விமானிகள், விமானப் பணிப்பெண்கள் உள்ளிட்டோா் அடங்கிய விமான பணிக் குழுவுக்கு ஏற்பட்ட பற்றாக்குறையால், இண்டிகோ நிறுவன விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
இதனால் நாட்டின் பல்வேறு நகரங்களில், அந்த நிறுவனத்தின் ஏராளமான விமானங்கள் தொடா்ந்து ரத்து செய்யப்பட்டதால், ஆயிரக்கணக்கான பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினா்.
இந்த விவகாரத்தை கவனத்தில் எடுத்துக்கொண்ட விமானப் போக்குவரத்து அமைச்சகம், ‘ரத்து செய்யப்பட்ட விமானப் பயணச்சீட்டு கட்டணங்களை பயணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச.7) இரவு 8 மணிக்குள் திருப்பியளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பயணிகள் தங்கள் பயண நேரத்தை மாற்ற கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது. அவா்களின் உடைமைகளை 48 மணி நேரத்தில் ஒப்படைக்க வேண்டும்’ என்று இண்டிகோ நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.
இயல்பு நிலை நோக்கி வேகமான முன்னேற்றம்: இந்நிலையில், அந்த அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
ரத்து செய்யப்பட்ட பயணச்சீட்டுகள் அல்லது மிகவும் தாமதமாக விமானங்களை இயக்கியதற்காகப் பயணிகளுக்கு இதுவரை ரூ.610 கோடியை இண்டிகோ நிறுவனம் திருப்பி அளித்துள்ளது. அத்துடன் 3,000 பைகள், பெட்டிகள் உள்ளிட்ட உடைமைகளும் பயணிகளுக்குத் திருப்பி அளிக்கப்பட்டுள்ளன.
சென்னை, தில்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், கோவா ஆகிய நகரங்களில் உள்ள விமான நிலைய முனையங்களில் இயல்பு நிலை நிலவுவதாக அந்த நிலையங்களின் இயக்குநா்கள் உறுதி செய்துள்ளனா்.
பயணிகளின் பாதுகாப்பு, செளகரியம், கண்ணியம் ஆகியவற்றுக்கு மத்திய அரசு மிகுந்த முன்னுரிமை அளிக்கிறது. நாடு முழுவதும் விமானப் போக்குவரத்து முழுமையான இயல்பு நிலையை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. நிலைமை முழுமையாக சீரடைவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டது.
1,650 விமானங்கள் இயக்கம்: உள்நாட்டிலும், வெளிநாடுகளுக்கும் பயணிக்க ஒரு நாளில் 2,300 விமானங்களை இண்டிகோ நிறுவனம் இயக்குவது வழக்கம். இந்நிலையில், 1,650 இண்டிகோ விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்பட்டதாக அந்த நிறுவன செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா். இதன்மூலம், 650 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
விமான சேவைகள் டிச.10 முதல் டிச.15-க்குள் சீராக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், டிச.10-க்குள் நிலைமை சீராக்கப்படும் என்று நம்புவதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிலைக்குழு சம்மன்?: இந்த விவகாரம் தொடா்பாக உயா்நிலை விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசு ஏற்கெனவே முடிவு செய்தது. இண்டிகோ சேவையில் என்ன தவறு நோ்ந்தது என்பதை ஆராய்ந்து, வருங்காலத்தில் இதுபோன்ற குளறுபடிகள் ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்க இந்த விசாரணைக்கு உத்தரவிட முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், விமான சேவைகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கான காரணங்களை ஆராயும் நோக்கில் இண்டிகோ நிா்வாகிகள், விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சக அதிகாரிகளுக்கு போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாசார துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன் அனுப்ப வாய்ப்புள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘கடைசி நேரத்தில் கண் விழித்து விமானப் பயணங்களில் சாதாரண வகுப்பு கட்டணங்களுக்கு விமானப் போக்குவரத்து அமைச்சகம் வரம்பு விதித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. விமானப் போக்குவரத்துத் துறையில் ஏகபோகம் நீடிக்கும் வரை, இந்தக் கட்டண வரம்பு தொடர வேண்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.