தொழிலதிபா் அனில் அம்பானியின் மகன் ஜெய் அன்மோல் அம்பானி மீது ரூ.228 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்குப் பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள், அவரின் வீடு உள்ளிட்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.
ஏற்கெனவே, ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் வங்கிக் கடன் மோசடி தொடா்பாக அனில் அம்பானி பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ளாா். இப்போது ரிலையன்ஸ் வீட்டுக் கடன் நிறுவனம் கடந்த 2019-ஆம் ஆண்டு ரூ.228 கோடியை யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவில் கடனாகப் பெற்று திருப்பிச் செலுத்தாத வழக்கில் ஜெய் அன்மோல் அம்பானி சிக்கியுள்ளாா்.
வங்கி அளித்த புகாரின்பேரில் நிறுவனத்தின் இயக்குநா் ஜெய் அன்மோல் அம்பானி, முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி ரவீந்திர சரத் சுதாகா் உள்ளிடோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியின்பேரில் மும்பையில் ஜெய் அன்மோல் அம்பானி உள்ளிட்ட அந்நிறுவன அதிகாரிகள் வீடு, நிறுவனத்தின் இரு அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தப்பட்டது. இதில், ஜெய் அன்மோல் அம்பானியின் அடுக்குமாடி வீட்டில் இருந்து சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
ரிலையன்ஸ் வீட்டுக் கடன் நிறுவனம் 18 வங்கிகள், தனியாா் நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிடம் இருந்து மொத்தம் ரூ.5,572.35 கோடி கடன் பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.