வாக்குச் சீட்டுகள் மூலம் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
மக்களவையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (எஸ்ஐஆர்) தொடர்பான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்த விவாதத்தில் சமாஜவாதி கட்சித் தலைவரும் எம்பியுமான அகிலேஷ் யாதவ் பங்கேற்று பேசியதாவது:
”உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மற்ரும் ஃபரூகாபாத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலின்போது, வாக்குப் பதிவு நாளில் காவல்துறையினர் மக்களை வீட்டைவிட்டு வெளியேறவிடாமல் தடுத்தனர். இது வாக்குப் பதிவை கடுமையாக பாதித்தது.
ராம்பூரில் பாஜக வெற்றி பெற்றது இதுவே முதல்முறை. தேர்தல் முறைகேடு நடந்தது தொடர்பான ஆதாரங்களை ஆணையத்திடம் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தேர்தல் நடப்பதற்கு முன்பே ஆயிரக்கணக்கான வாக்குகளை தேர்தல் ஆணையம் நீக்கி இருக்கிறது. தேர்தல் ஆணையம் கோரியபடி பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பித்த போதிலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தற்போது வரை எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபட்ட 10 பிஎல்ஓ-க்கள் பலியாகியுள்ளனர். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக தலா ரு. ஒரு கோடி மத்திய அரசு வழங்க வேண்டும். அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
இபிஎம் போன்ற மின்னணு சாதனங்கள் மூலம் நடத்தப்படும் தேர்தல்கள் குறித்து பல கேள்விகள் எழுப்பப்படுவதால், வாக்குச் சீட்டுகள் மூலம் தேர்தல்களை நடத்த வேண்டும்.
அமெரிக்கா, ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளே வாக்குச் சீட்டு மூலம் தேர்தலை நடத்தும்போது, நாம் இயந்திரங்களைப் பயன்படுத்துவது ஏன்?.
இது வாக்குத் திருட்டு அல்ல, வாக்குக் கொள்ளை. நேர்மையாக தேர்தல்கள் நடத்தப்பட்டால், நீங்கள் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற மாட்டீர்கள்.” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.