இந்தியா

காந்தி, படேலை தவிர்த்து நேருவை மட்டும் குறிவைப்பது ஏன்? மோடி, அமித் ஷாவுக்கு கார்கே கேள்வி!

வந்தே மாதரம் பாடல் தொடர்பான விவாதத்தில் பாஜகவுக்கு கார்கே சரமாரி கேள்வி...

இணையதளச் செய்திப் பிரிவு

வந்தே மாதரம் பாடல் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவை மட்டும் பிரமரும் உள்துறை அமைச்சரும் குறிவைப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டியுள்ளார்.

தேசியப் பாடலான வந்தே மாதரம் 150 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதை கொண்டாடும் வகையில் மாநிலங்களவையில் இன்று விவாதத்தை தொடக்கிவைத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.

அப்போது நேரு, இந்திரா காந்தியை விமர்சித்து அமித் ஷா பேசியதாவது,

“நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, வந்தே பாரதத்தின் 50-ஆவது ஆண்டு விழாவின்போது, முதல் இரண்டு சரணங்களை மட்டும் பாட வேண்டும் என்றார். அங்கிருந்துதான் சமரசம் தொடங்கியது, அது பிரிவினைக்கு வழிவகுத்தது. என்னைப் போன்ற பலர், வந்தே மாதரம் இரண்டு சரணங்களாக குறைக்கப்படாமல் இருந்திருந்தால் பிரிவினை நடந்திருக்காது என நம்புகிறார்கள்.

வந்தே மாதரம் 100 ஆண்டுகளை நிறைவு செய்தபோது, ​​வந்தே மாதரம் எனச் சொன்னவர்கள் இந்திரா காந்தியால் சிறைகளில் அடைக்கப்பட்டனர். அவசரநிலை அமல்படுத்தப்பட்டது, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்." என்றார்.

இதனைத் தொடர்ந்து, வந்தே மாதரம் என்ற முழக்கத்துடன் காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான கார்கே உரையாற்றத் தொடங்கினார்.

அப்போது, “காங்கிரஸ்தான் வந்தே மாதரத்தை சுதந்திரத்திற்கான முழக்கமாக மாற்றியது. காங்கிரஸ் அதன் மாநாடுகளில் வந்தே மாதரம் பாடும் பாரம்பரியத்தைத் தொடங்கியது. நீங்கள் அதைச் செய்தீர்களா?

பிரதமரும் உள்துறை அமைச்சரும் ஜவஹர்லால் நேருவை அவமதிக்கும் வாய்ப்பை ஒருபோதும் தவறவிடுவதில்லை. நேரு தலைமையிலான காங்கிரஸ் வந்தே மாதரத்தின் முக்கிய பகுதிகளை அகற்றியதாக பிரதமர் குற்றம் சாட்டினார். உள்துறை அமைச்சர் முஸ்லிம் திருப்திப்படுத்தியதாக இன்று பேசுகிறார்.

நீங்கள் இப்போது இதைப் பற்றிப் பேசுகிறீர்களே, முஸ்லிம் லீக்குடன் கூட்டணி வைத்து வங்கத்தில் நீங்கள் ஒரு அரசாங்கத்தை அமைத்தபோது, ​​உங்கள் தேசபக்தி எங்கே இருந்தது? உங்கள் வரலாற்றைப் படியுங்கள்.

1937 ஆம் ஆண்டு காங்கிரஸ் காரியக் கமிட்டி ஒருமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, தேசிய நிகழ்வுகளில் வந்தே மாதரத்தின் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே பாட வேண்டும் என்று பரிந்துரைத்தது. நேரு மட்டுமா தனியாக தீர்மானத்தை நிறைவேற்றினார்? மகாத்மா காந்தி, மௌலா ஆசாத், நேதாஜி சுபாஷ் சந்திரா போஸ், சர்தார் படேல் உள்ளிட்ட தலைவர்களும்தான் தீர்மானத்தை ஆதரித்தார்கள். ஏன் நேருவை மட்டும் குறிவைக்கிறீர்கள்? அவரது பிம்பத்தை குறிவைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், அது சாத்தியமற்றது.

இந்த நாடாளுமன்றத்தில் மக்களின் பிரச்னைகளுக்காக உழைப்பது மட்டுமே பாரத மாதாவுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி” எனத் தெரிவித்தார்.

Why are you targeting only Nehru, leaving out Gandhi, Patel, others : Kharge questions

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துலா ராசிக்கு பணவரவு: தினப்பலன்கள்!

சிவகாசியில் வழிப்பறி: இருவா் கைது

தென்னை மரங்களுக்கு பயிா்க் காப்பீடு

ஸ்ரீவில்லிபுத்தூா் மலையடிவாரத்தில் புதிய கற்காலக் கருவிகளின் தேய்ப்புப் பள்ளங்கள்

வாகனத்தை சேதப்படுத்தி ரேஷன் அரிசி மூட்டைகளை வீசிச் சென்ற மா்மநபா்கள்

SCROLL FOR NEXT