பெங்களூரில் புகழ்பெற்ற ஹலசுரு சோமேஸ்வரர் சுவாமி கோயிலில், இனி திருமண நிகழ்வுகள் நடத்த அனுமதிக்கப்படாது என்று கோயில் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
அண்மைக் காலமாக, கோயில்களில் திருமணங்கள் நடத்தப்பட்டு, அந்த தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்துக் கோரி நீதிமன்றம் செல்லும்போது, வழக்கு விசாரணைக்காக, கோயில் அர்ச்சகர்கள் நீதிமன்றத்துக்கு வருமாறு அலைக்கழிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கோயில் நிர்வாகம், திருமணம் செய்ய அனுமதி மறுத்தது குறித்து கர்நாடக முதல்வர் அலுவலகத்தில் ஒருவர் மனு கொடுத்திருந்த நிலையில் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த மனு குறித்து, கோயில் நிர்வாகத்திடம், முதல்வர் அலுவலகம் தரப்பில் விளக்கம் கேட்டிருந்தபோது, அதிகரித்து வரும் விவாகரத்து வழக்குகள் காரணமாக, அர்ச்சகர்கள் நீதிமன்றத்துக்கு அலைக்கழிக்கப்படுவதால் சில ஆண்டுகளுக்கு முன்பே, கோயிலுக்குள் திருமணம் நடத்த தடை செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் இருந்த மிகப் பழமையான கோயிலும், எப்போதும் திருமணக் கூட்டங்களால் நிறைந்து காணப்பட்டு வந்த கோயிலில், அண்மைக் காலமாக, விவகாரத்துக் கோரும் தம்பதிகள், சில சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்காக, கோயில் நிர்வாகத்தை நாடுவது அதிகரித்துள்ளது.
அது மட்டுமல்லாமல், நீதிமன்றத்தில் விவகாரத்து வழக்குகள் நடக்கும்போது, நீதிமன்றத்திலிருந்து அர்ச்சகர்கள் நேரில் ஆஜராகவும் நோட்டீஸ் அனுப்பப்படுவதால், கோயிலில் நித்ய கால பூஜைகள் பாதிக்கப்படுகின்றன.
இது தவிர, சில ஜோடிகள் வீட்டை விட்டு ஓடி வந்து, போலியான ஆவணங்களைக் கொடுத்து கோயிலில் திருமணம் செய்துகொள்கிறார்கள். ஆனால், அதன்பிறகு, அவர்களது குடும்பத்தினர் வந்து வழக்குப்போட்டு சட்ட சிக்கல்களை கோயில் நிர்வாகம் எதிர்கொள்ளும் நிலை ஏற்படுகிறது. அப்போதுதான், அர்ச்சகர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்க்கவே, திருமணங்கள் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த கோயில், கர்நாடக அறநிலையத் துறையின் கீழ் செயல்படுகிறது. எதிர்காலத்தில் வேண்டுமானால் இந்த தடை நீக்கப்படலாம். ஆனால், தற்போதைக்கு இங்கு திருமணங்கள் நடத்தப்படாது என்று அர்ச்சகர்கள் கூறுகிறார்கள்.
இதையும் படிக்க.. புதுச்சேரியில் ரேஷன் கடை இல்லையா? விஜய் சொன்னது பற்றி அமைச்சர் நமச்சிவாயம் விளக்கம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.