கேரளத்தில் பிரபல நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட என்.எஸ்.சுனில், மார்ட்டின் ஆன்டனி, பி.மணிகண்டன், வி.பி.விஜேஷ், எச். சலீம், பிரதீப் ஆகிய 6 பேருக்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தீர்ப்பு குறித்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று அரசுத் தரப்பில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2017, பிப்ரவரி 17-ஆம் தேதி நடிகை பயணித்த காரில் அத்துமீறி நுழைந்த ஒரு கும்பல், அவரைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அதை செல்போனில் படம்பிடித்தது. கேரளத்தையே உலுக்கிய இந்தச் சம்பவம் நடந்த சில நாள்களிலேயே முக்கியக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே, பிரதான குற்றவாளியான என்.எஸ்.சுனில் சிறையில் இருந்தபடி நடிகர் திலீப்புக்கு கடிதம் அனுப்பினார். இதன் அடிப்படையில், 2017 ஜூலையில் திலீப் கைது செய்யப்பட்டார். பின்னர், அக்டோபரில் அவருக்குப் பிணை வழங்கப்பட்டது. இந்த வழக்கில் முதலில் 2017, ஏப்ரலில் 7 பேருக்கு எதிராக முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
திலீப் கைதுக்குப் பிறகு, அவர் உள்பட மேலும் 7 பேர் மீது அதே ஆண்டு நவம்பரில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சம்பவம் நிகழ்ந்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த நவ. 25-ஆம் தேதி விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து இவ்வழக்கில் எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஹனி எம்.வர்கீஸ் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கினார்.
அதில், நடிகர் திலீப் மற்றும் சார்லி தாமஸ், சனில் குமார், சரத் ஆகிய 3 பேர் இந்த வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டனர். என்.எஸ்.சுனில், மார்ட்டின் ஆன்டனி, பி.மணிகண்டன், வி.பி.விஜேஷ், எச். சலீம், பிரதீப் ஆகிய 6 பேர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டனர்.
இந்த 6 பேரும் இந்திய தண்டனைச் சட்டத்தின் குற்றவியல் சதி, பெண் கடத்தல், கூட்டுப் பாலியல் வன்கொடுமை, சாட்சியங்களை அழித்தல் உள்பட பல்வேறு பிரிவுகளின்கீழ் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டனர். குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் வெள்ளிக்கிழமை (டிச. 12) அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.