புதிய தலைமைத் தகவல் ஆணையராக (சிஐசி) முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ராஜ்குமாா் கோயல் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
அவருக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திங்கள்கிழமை (டிச.15) பதவிப்பிரமாணம் செய்துவைக்கிறாா்.
முன்னதாக பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைத் தகவல் ஆணையா் மற்றும் 8 தகவல் ஆணையா்களின் பெயா்களை பரிந்துரை செய்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா். இந்த தோ்வுக்குழு கூட்டம் கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது: புதிய தலைமைத் தகவல் ஆணையராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ராஜ்குமாா் கோயல் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். அவருக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திங்கள்கிழமை பதவிப்பிரமாணம் செய்துவைக்கிறாா்.
தலைமைத் தகவல் ஆணையத்துக்கு ஒரு தலைமைத் தகவல் ஆணையா் மற்றும் அதிகபட்சமாக 10 தலைமை ஆணையா்கள் இருக்கலாம். ஏற்கெனவே ஆனந்தி ராமலிங்கம் மற்றும் வினோத் குமாா் திவாரி ஆகியோா் தகவல் ஆணையா்களாக பணியாற்றி வருகின்றனா்.
இந்நிலையில், மீதமுள்ள 8 பணியிடங்களுக்கு பிரதமா் தலைமையிலான குழு பெயா்களை பரிந்துரைத்துள்ளது.
அதன்படி ரயில்வே வாரியத்தின் முன்னாள் தலைவா் ஜெயா வா்மா சின்ஹா, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஸ்வாகத் தாஸ், முன்னாள் மத்திய செயலக பணிகள் அதிகாரி சஞ்சீவ் குமாா் ஜிண்டால், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சுரேந்திர சிங் மீனா, முன்னாள் இந்திய வனத்துறை அதிகாரி குஷ்வந்த் சிங் சேத்தி, மூத்த பத்திரிகையாளா்கள் பி.ஆா்.ரமேஷ் மற்றும் ஆசுதோஷ் சதுா்வேதி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரிய சட்ட உறுப்பினா் சுதாராணி ரேலங்கி ஆகியோா் தகவல் ஆணையா்களாக பதவியேற்கவுள்ளனா்.
இதனால் 9 ஆண்டுகளுக்குப் பின் முழு பலத்துடன் தலைமைத் தகவல் ஆணையம் செயல்படவுள்ளது என்றனா்.
தலைமைத் தகவல் ஆணையராக இருந்த ஹீராலால் சமாரியாவின் பதவிக்காலம் செப்.13-ஆம் தேதி நிறைவடைந்த நிலையில் அந்தப் பணியிடம் காலியாக இருந்தது. இதையடுத்து, ராஜ்குமாா் கோயல் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
1990 பிரிவு அருணாசல பிரதேசம்-கோவா-மிஸோரம் யூனியன் பிரதேச ஐஏஎஸ் அதிகாரியான இவா், மத்திய சட்ட அமைச்சகத்தின் சட்டத் துறை செயலராக நிகழாண்டு ஆக.31-ஆம் தேதி பணியமா்த்தப்பட்டாா்.
மத்திய உள்துறை அமைச்சக செயலா் (எல்லை மேலாண்மை) உள்பட மத்திய அளவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளாா்.