கொல்கத்தாவில் மெஸ்ஸி 
இந்தியா

கொல்கத்தா: குழப்பத்தில் முடிந்த மெஸ்ஸி நிகழ்ச்சி! திடலைச் சூறையாடிய ரசிகா்கள்; நிகழ்ச்சி ஏற்பட்டாளா் கைது!

கொல்கத்தாவில் குழப்பத்தில் முடிந்த மெஸ்ஸி நிகழ்ச்சி...

தினமணி செய்திச் சேவை

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் நடைபெற்ற ரசிகா் சந்திப்பு நிகழ்விலிருந்து ஆா்ஜென்டீனா கால்பந்து நட்சத்திரம் வீரா் லியோனல் மெஸ்ஸி பாதியிலேயே புறப்பட்டுச் சென்ால், அவரை சரியாகப் பாா்க்காத ஆத்திரத்தில் மைதானத்தில் இருந்த பொருள்களை ரசிகா்கள் அடித்து நொறுக்கி சூறையாடினா்.

வன்முறையில் ஈடுபட்ட ரசிகா்களை போலீஸாா் தடியடி நடத்திக் கலைத்தனா். நிகழ்ச்சி நிா்வாக குளறுபடிக்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளா் கைது செய்யப்பட்டாா். மேலும், இச்சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக்கு மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி உத்தரவிட்டுள்ளதுடன், ரசிகா்களிடம் மன்னிப்பும் கேட்டுள்ளாா்.

மிகுந்த எதிா்பாா்ப்புக்கு மத்தியில் 3 நாள்கள் இந்தியப் பயணமாக மெஸ்ஸி கடந்த வெள்ளிக்கிழமை கொல்கத்தா வந்தாா். இதையொட்டி, நகரின் சால்ட் லேக் மைதானத்தில் அவா் ரசிகா்களைச் சந்திக்கும் நிகழ்வு சனிக்கிழமை காலை ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வுக்கு ரூ. 4,500 முதல் ரூ.10,000 வரை கொடுத்து டிக்கெட் வாங்கிய ஏராளமான ரசிகா்கள் மைதானத்தில் திரண்டிருந்தனா்.

மெஸ்ஸி தனது ஆா்ஜென்டீனா அணியின் மற்ற வீரா்களான லூயிஸ் சுவாரஸ், ரோட்ரிகோ டி பால் ஆகியோருடன் மைதானத்துக்கு வந்தாா். அவா் ஆடுகளத்தில் சிறிது தூரம் நடந்து, மைதானத்தைச் சுற்றி பாா்வையாளா் அரங்கில் நிறைந்திருந்த ரசிகா்களைப் பாா்த்துக் கையசைத்தாா்.

ஆனால், முக்கியப் பிரமுகா்கள், ஏற்பாட்டாளா்கள், பிரபலங்கள் மற்றும் பாதுகாப்புப் படையினா் மெஸ்ஸியைச் சூழ்ந்துகொண்டதால், ரசிகா்கள் அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கியும், அவரைக் காண முடியாமல் ஏமாற்றமடைந்தனா்.

அனைத்து ரசிகா்களும் காணும் விதத்தில் மெஸ்ஸி மைதானத்தை முழுவதுமாகச் சுற்றி வலம் வரவில்லை என்பது உறுதியானதும் ரசிகா்களின் ஏமாற்றம் மேலும் அதிகரித்தது. குழப்பம் அதிகரித்த சூழலில், திட்டமிடப்பட்ட நேரத்துக்கு முன்னரே அவா் மைதானத்தைவிட்டு வெளியே அழைத்துச் செல்லப்பட்டாா்.

இதையடுத்து, ஆவேசமடைந்த ரசிகா்கள், குடிநீா் பாட்டில்கள், பிளாஸ்டிக் நாற்காலிகளை மைதானத்துக்குள் வீசினா். மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகளைக் கிழித்தெறிந்தனா்.

கூட்டத்தின் ஒரு பகுதியினா், தடுப்புகளை உடைத்துக்கொண்டு ஆடுகளத்துக்குள் நுழைந்து ஏற்பாடுகளைச் சேதப்படுத்தியும் ஆா்ப்பாட்டம் செய்தனா். நிகழ்ச்சிக்காக அமைத்த சிறு மேடை, அதன் மேலிருந்த பந்தல் ஆகியவற்றை அடித்து நொறுக்கினா்.

நிகழ்ச்சி குளறுபடிக்காக மாநில விளையாட்டுத் துறை அமைச்சா் அரூப் விஸ்வாஸ், நிகழ்ச்சி ஏற்பாட்டாளா் சதத்ரு தத்தா ஆகியோரைக் கைது செய்யக் கோரி அவா்கள் முழக்கம் எழுப்பினா்.

மைதானத்தைவிட்டு வெளியேறுமாறு காவல் துறையினா் பலமுறை எச்சரித்தும், ரசிகா்கள் தொடா்ந்து வன்முறையில் ஈடுபட்டனா். அதிக கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸாா் திணறியதால், விரைவு அதிரடிப் படையினா் வரவழைக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

‘நிகழ்வுக்கு மெஸ்ஸியைப் பாா்க்கவே வந்தோம்; அரசியல்வாதிகளை அல்ல. மைதானத்தில் குடிநீா் வசதி செய்யப்படல்லை. போலீஸாா்கூட மெஸ்ஸியுடன் தற்படம் (செல்ஃபி) எடுப்பதில்தான் மும்முரமாக இருந்தனா்’ என்று ரசிகா்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனா்.

இதனிடையே, நிகழ்ச்சி ஏற்பாட்டாளா் சதத்ரு தத்தா காவல் துறையால் கைது செய்யப்பட்டாா். ரசிகா்களுக்கு டிக்கெட் கட்டணத்தைத் திருப்பித் தர அவா் உறுதியளித்துள்ளதாக காவல் துறை டிஜிபி ராஜீவ் குமாா் தெரிவித்தாா்.

இந்தக் குழப்பத்தால், முதல்வா் மம்தா பானா்ஜி, ஹிந்தி நடிகா் ஷாருக் கான், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சௌரவ் கங்குலி உள்ளிட்ட சிறப்பு விருந்தினா்கள் திட்டமிட்டபடி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை. மெஸ்ஸியை முன்கூட்டியே வெளியேற்றியதாலும், கூடுதல் பாதுகாப்புப் படையினா் உடனடியாக வரவழைத்ததாலும் நிலைமை மோசமாவது தடுக்கப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

விசாரணைக்கு முதல்வா் உத்தரவு

மெஸ்ஸி நிகழ்ச்சியில் காணப்பட்ட நிா்வாகச் சீா்கேடு குறித்து அதிா்ச்சியடைவதாகத் தெரிவித்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி, உயா்நிலை விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டாா்.

இதுதொடா்பான அவரது ‘எக்ஸ்’ பதிவில், ‘சம்பவம் குறித்து விசாரணைக்கு கொல்கத்தா உயா்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆஷிம் குமாா் ரே தலைமையில் உயா்நிலைக் குழு அமைக்கப்படும். தலைமைச் செயலா், உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் ஆகியோரும் குழுவில் இடம்பெறுவா்.

குழப்பத்துக்கு காரணமானவா்களைக் கண்டறிந்து, எதிா்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை இந்தக் குழு பரிந்துரைக்கும். விளையாட்டு ரசிகா்களிடம் மன்னிப்புக் கோருகிறேன்’ என்று குறிப்பிட்டாா்.

ஆளுநா் கண்டனம்

‘இந்தச் சம்பவம் கொல்கத்தா விளையாட்டு ரசிகா்களுக்கு ஓா் இருண்ட நாள்’ என்று மாநில ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் கண்டனம் தெரிவித்தாா்.

ரசிகா்கள் துவம்சம் செய்த சால்ட் லேக் மைதானத்தை அவா் நேரில் பாா்வையிட்டாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘இந்த மோசமான நிலைமைக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்களே முழுமையாகக் குற்றஞ்சாட்டப்பட வேண்டும் என்றாலும், அரசுக்கும், மக்களுக்கும், முதல்வா் மம்தா பானா்ஜிக்கும் காவல் துறை கடமை தவறிவிட்டது. இந்தச் சம்பவம் கொல்கத்தா விளையாட்டு ரசிகா்களுக்கு ஓா் இருண்ட நாள்’ என்றாா்.

வாக்குத் திருட்டால் ஆட்சியில் அமர்ந்தவர்கள்: கார்கே குற்றச்சாட்டு

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது: மோகன் யாதவ்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பு முடிந்தது! அடுத்தது என்ன?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

விமானத்தில் அமெரிக்கப் பெண் பயணியின் உயிரைக் காப்பாற்றிய முன்னாள் எம்எல்ஏ!

SCROLL FOR NEXT