காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி (எம்ஜிஎன்ஆா்இஜி) திட்டத்தின் பெயரை மாற்றும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
மக்களவையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு மாற்றாக ‘வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு’ சட்ட மசோதா செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
இந்த நிலையில், கர்நாடக மாநிலம், பெலகாவி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு, கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தலைமையில் அக்கட்சியின் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு முன்னதாக செய்தியாளர்களுடன் பேசிய சிவக்குமார், “நேஷனல் ஹெரால்டு என்பது சுதந்திரப் போராட்டத்தின் போது ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட, நாட்டின் பெருமைக்குரிய ஒரு பத்திரிகை. நான் ஒரேவொரு கேள்விதான் கேட்கிறேன், அமலாக்கத்துறை ஏன் இன்னும் எனக்கு முதல் தகவல் அறிக்கை நகலை வழங்கவில்லை?, இன்று அமலாக்க இயக்குநரகத்தின் நற்பெயர் களங்கப்படுத்தப்பட்டுள்ளது.” என்றார்.
முன்னதாக, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்க தில்லி நீதிமன்றம் நேற்று மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.