நமது நிருபர்
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனைப் பதவியிலிருந்து நீக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அளித்துள்ள கண்டனத் தீர்மான நோட்டீஸை நிராகரிக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்துள்ள அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது பதவி நீக்க நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான இந்த முயற்சிக்குக் கண்டனம் தெரிவித்து, உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகள், உயர்நீதிமன்றங்களின் முன்னாள் தலைமை நீதிபதிகள் மற்றும் உயர்நீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய ஒரு குழுவினர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
சில நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்டு, சில மூத்த வழக்குரைஞர்களால் ஆதரிக்கப்படும் இந்த நடவடிக்கையானது, ஒரு குறிப்பிட்ட தரப்பினரின் சித்தாந்த மற்றும் அரசியல் எதிர்பார்ப்புகளுடன் ஒரு நீதிபதியின் நீதித் துறை உத்தரவுகள் ஒத்துப்போகவில்லை என்பதற்காக, பதவியில் இருக்கும் ஒரு நீதிபதியை மிரட்டிப் பணிய வைப்பதற்கான ஒரு வெட்கமற்ற முயற்சி என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.
எம்.பி.க்களின் அழுத்தத்துக்கு பணிந்தால் நீதித் துறையின் சுதந்திரமும் கண்ணியமும் அழிக்கப்பட்டுவிடும். நீதித் துறை இதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. மேலும் அதன் சுதந்திரத்தில் யாரும் தலையிடாமல் இருப்பதை உறுதிசெய்ய கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான கண்டனத் தீர்மானத்தை ஏற்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீதான பதவி நீக்கத் தீர்மான அறிவிப்பில் கையொப்பமிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் கோரியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.