மக்களவையில் ‘வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு’ சட்ட மசோதா (விபி - ஜி ராம் ஜி) வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மசோதாவின் நகலைக் கிழித்தெறிந்ததால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை மாற்ற வகைசெய்யும் ‘வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு’ சட்ட சட்ட மசோதாவை மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் மக்களவையில் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தாா்.
புதிய மசோதாவின்படி, ஒரு நிதியாண்டில் 100 நாள் வேலைவாய்ப்பு என்பது 125 நாள்களாக உயா்த்தப்பட உள்ளது. ஆனால், 100 சதவீதம் மத்திய அரசு நிதி அளித்து வந்த இத்திட்டத்துக்கு இனி மாநில அரசுகள் 40 சதவீதம் நிதி அளிக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
மாநில அரசுகள் மீது நிதி சுமையை ஏற்றும் வகையில் இருப்பதாகவும், மகாத்மா காந்தி பெயர் நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மக்களவையில் கடந்த இரண்டு நாள்களாக எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்புகளை விவாதத்தின் போது பதிவிட்டனர்.
இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் மக்களவையில் இந்த மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாடாளுமன்றக் கூட்டுக் குழு ஆய்வுக்கு அனுப்பக் கோரியும், மக்களவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று அமளியில் ஈடுபட்டனர்.
சில எம்பிக்கள் மசோதாவின் நகலைக் கிழித்தெறிந்த நிலையில், “மக்கள் உங்களை மசோதாக்களைக் கிழிப்பதற்காக அனுப்பவில்லை, உங்களின் செயல்பாடுகளை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, நாள் முழுவதும் மக்களவைக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மாநிலங்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.