வரலாற்றுச் சிறப்புமிக்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தை அழிப்பது கிராமப்புற இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்குப் பேரழிவான விளைவுகளை ஏற்படுத்தும் எனக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறினார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்குப் பதிலாகக் கொண்டுவரப்பட்ட கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு 125 நாள்கள் ஊதிய வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்யும் விக்சித் பாரத் கியாரண்டி பார் ரோஸ்கர் அண்ட் ஆஜிவிகா மிஷன் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்த நிலையில் சோனியாவின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
மகாத்மாவின் சர்வோதயா (அனைவரின் நலன்) என்ற தொலைநோக்குப் பார்வையை உணர்ந்து வேலை செய்வதற்கான அரசியலமைப்பு உரிமையை நடைமுறைப்படுத்தியது. இப்போது முன்னெப்போதையும் விட நாம் அனைவரையும் பாதுகாக்கும் உரிமங்களைக் காக்க நாம் ஒன்றிணைவது மிகவும் அவசியம். கிராமப்புறத் துயரங்களைக் கையாளுவதற்கான இந்த வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் இப்போது புல்டோசர் கொண்டு இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் இந்திய அரசியலமைப்பின் 41-வது பிரிவால் ஈர்க்கப்பட்ட உரிமைகள் அடிப்படையிலான ஒரு சட்டமாகும். இது குடிமக்கள் வேலை செய்வதற்கான உரிமையை உறுதி செய்யுமாறு அரசை வலியுறுத்துகிறது.
கடந்த சில நாள்களாக பிரதமர் மோடி அரசு எந்தவொரு விவாதமும், ஆலோசனையும், மத்திய-மாநில உறவுகளுக்கு மரியாதை அளிக்காமல் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிப்பதே குறிக்கோளாகக் கொண்டுள்ளது. மோடி அரசின் புதிய மசோதா, மத்திய அரசு தனது விருப்பப்படி அறிவிக்கும் கிராமப்புறங்களுக்கு மட்டுமே இந்தத் திட்டத்தின் வரம்பைக் கட்டுப்படுத்தியுள்ளது.
கிராமப்புற இந்தியாவில் நிலமற்ற ஏழைகளின் பேரம் பேசும் சக்தியை அதிகரித்ததுதான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (MGNREGA) மிகப்பெரிய தாக்கங்களில் ஒன்றாகும், இது விவசாயக் கூலிகளை உயர்த்தியது என்று அவர் கூறினார்.
மோடி அரசு வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை 100 நாள்களிலிருந்து 125 நாள்களாக உயர்த்தியுள்ளதாகப் போலியான கூற்றுகளை முன்வைப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
மூன்று கறுப்பு விவசாயச் சட்டங்கள் மூலம், விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான உரிமையை மறுக்க அரசு முயற்சிக்கிறது. 2013-ஆம் ஆண்டின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் அடுத்ததாகப் பறிக்கப்படலாம் என்று அவர் கூறினார்.
இதையும் படிக்க: இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.