தன்னாட்சிபெற்ற சென்னையில் புகழ்பெற்ற தனியார் பொறியியல் கல்லூரியான எஸ்எஸ்என் கல்லூரி, சிவ நாடார் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படுவதால், அண்ணா பல்கலை கலந்தாய்வு மூலம் இனி ஏழை மாணவர்கள் அந்தக் கல்லூரியில் சேர்க்கைப் பெறுவது எட்டாக் கனியாக மாறும் என்ற கவலை எழுந்துள்ளது.
அதே வேளையில், பிளஸ் 2 மாணவர்கள், சிவ நாடார் பல்கலைக்கான நுழைவுத் தேர்வு, எஸ்எஸ்என் கல்லூரிக்கு தனியாக நுழைவுத் தேர்வு எழுதத் தேவையில்லை.
ஆனால், வெறும் பிளஸ் 2 மதிப்பெண்ணில் நல்ல கட் ஆப் மதிப்பெண் எடுத்திருந்தாலே, எஸ்எஸ்என் கல்லூரியில் குறைந்த கட்டணத்தில் சேர்க்கை பெற்று வந்த ஏழை மாணவ, மாணவிகளுக்குத்தான் இனி எஸ்எஸ்என் என்ற கனவே கலைந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இணைப்பின்மூலம், இதில் சேர்க்கை பெற நிச்சயம் எஸ்என்யுசிஇஇ எனப்படும் நுழைவுத் தேர்வை எழுதியே ஆக வேண்டும்.
அது மட்டுமா? நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் அடுத்து நடக்கும் நேர்காணலில் தேர்ச்சி பெறுவது என்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது. ஜேஇஇ தேர்வுக்கு மிகப்பெரிய பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற்றவர்களுக்கு மட்டுமே இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி என்பது சாத்தியம்.
வெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல, தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சி பெறாத சிபிஎஸ்இ மாணவர்களும் எஸ்எஸ்என் கனவை மறந்துவிடும் நிலையே உள்ளது.
தனியார் பொறியியல் கல்லூரியான எஸ்எஸ்என், பல்கலையுடன் இணையும் என்பதால், அங்கு வசூலிக்கப்படும் கட்டணமே இதற்கும் பொருந்தும். இதுவரை கலந்தாய்வில் சேர்க்கை பெற்று குறைந்தபட்ச கட்டணம் செலுத்தி வந்த முறை இனி இருக்காது. அங்கு 2 லட்சம் முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்று வர பேருந்து கட்டணம், சென்று வர முடியாத மாணவர்கள் தங்கிப் படிக்க விடுதி என கல்விக் கட்டணம் கடுமையாக உயரும் என்பதால் சாதாரண குடும்ப மாணவர்கள் சேர்க்கை கிடைத்தாலுமே படிப்பது என்பது எளிதல்ல.
நுழைவுத் தேர்வு வினாக்கள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து கேட்கப்பட்டாலும்கூட, அனைத்து சிபிஎஸ்இ மாணவர்களும் தேர்ச்சி பெற்றுவிடுவதில்லை, ஜேஇஇ தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகிவிட்டது.
ஏற்கனவே சிவ நாடார் பல்கலைக்கான நுழைவுத் தேர்வு விண்ணப்பங்கள் தொடங்கி விட்டன. விரைவில் இளநிலை படிப்புக்கும் விண்ணப்பங்கள் தொடங்கிவிடும். ஏப்ரல் முதல் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு, தேர்ச்சி பெற்றவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
மிகச் சிறந்த கல்வியை வழங்கும் நிறுவனங்கள், ஏழை, எளிய மாணவர்களுக்கு தொடர்ந்து எட்டாக்கனியாக மாறிக் கொண்டிருப்பது இந்த ஆண்டு எஸ்எஸ்என் கல்லூரியில் சேர்க்கை பெறுவது ஒன்றையே குறிக்கோளாக வைத்து படித்து வந்த மாணவர்களுக்கு பேரிடியாக விழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.