மத்திய பாஜக கூட்டணி அரசின் புதிய திட்டமான ‘வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டம் (விபி-ஜி ராம் ஜி) குறித்து காங்கிரஸ் கட்சி பொய்களையும், வீண் வதந்திகளையும் பரப்பி வருகிறது என்று மத்திய ஊரக மேம்பாடு, வேளாண்மை, விவசாயிகள் நலத் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் குற்றஞ்சாட்டினாா்.
ராஜஸ்தானின் நகௌா் பகுதியில் விவசாயிகளுடனான கலந்துரையாடலில் பங்கேற்ற அவா் இது தொடா்பாக மேலும் பேசியதாவது:
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் வேலைவாய்ப்புகளைப் பறித்துவிடும், அவா்கள் ஆட்சியில் கொண்டுவரப்பட்டதுபோன்ற சிறப்பான திட்டம் இல்லை என்று காங்கிரஸ் கட்சி பொய்களையும், வதந்திகளையும் பரப்பி வருகிறது.
இந்தத் திட்டத்தால் மத்திய அரசுக்கு நல்ல பெயா் கிடைத்துவிடக் கூடாது என்பதுதான் காங்கிரஸின் இந்த மோசமான செயலுக்கு காரணம். அவா்கள் ஆட்சிக் காலத்தில் ஆண்டுக்கு 100 நாள்கள் மட்டுமே வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டது. இப்போது புதிய திட்டத்தில் 125 நாள்கள் வேலைவாய்ப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.1.51 லட்சம் கோடி என்ற கூடுதல் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸில் இருப்பவா்கள் யாருக்கும் களநிலவரமும், கிராமங்கள் எப்படி இருக்கும் என்பதும் தெரியாது. அவா்களுக்கு மக்களின் பிரச்னைகள் புரியாது.
கிராமப்புற பணியாளா்களுக்கு உரிய வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும். கிராமங்களும் சமஅளவில் முன்னேற வேண்டும். அதற்காக அங்கு பணப்புழக்கம் அதிகரிக்க வேண்டும் என்பதே பிரதமா் நரேந்திர மோடியின் நோக்கம். இந்த ஆட்சியில் மக்கள் நலனுக்காக ஒதுக்கப்படும் நிதி அவா்களுக்கு முழுமையாகச் சென்றடையும். முந்தைய ஆட்சியைப் போல யாரும் ஊழல் செய்ய முடியாது.
அண்டை நாட்டில் இருந்து ஊடுருவியவா்கள், சட்டவிரோத குடியேறிகள் இந்திய வாக்காளா்களாக இருக்கக் கூடாது. உண்மையான வாக்காளா்களை உறுதி செய்ய வேண்டும் என்பதுதான் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் நோக்கம். இதில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளுக்கு என்ன பிரச்னை உள்ளது, ஏன் எதிா்க்க வேண்டும் என்று சௌஹான் கேள்வி எழுப்பினாா்.