மிகச் சாதாரண பிழைப்பின் மூலம் தினக் கூலி, வாரக் கூலி, மாத வருவாய் ஈட்டும் அப்பாவி மக்களிடமிருந்து ஒவ்வொரு 100 ரூபாயிலிருந்தும் மத்திய அரசு எவ்வாறு, எவ்வளவு தொகையை பிடித்துக் கொள்கிறது என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகிறது.
அது ஊதிய விகிதத்துக்கு ஏற்ப மாறுபடுமா? மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுமா என்ற தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.
ஒருவர் ஈட்டும் வருவாயிலிருந்து, மத்திய அரசு வருமான வரி, ஜிஎஸ்டி என பல்வேறு முறைகளில் ஒரு தொகையை திரும்பப் பெற்றுக் கொள்கிறது. அது போக மிச்சத் தொகையைத்தான் மக்கள் தங்களுக்காக செலவிடுகிறார்கள்.
பல்வேறு வரிகள், மூலம் வருவாய் ஈட்டும் மத்திய அரசு, மக்களிடமிருந்து ஒவ்வொரு 100 ரூபாயிலிருந்தும் எவ்வளவு தொகையை ஈட்டுகிறது என்ற ஒரு தரவுகள் ஊடகங்களில் வெளியாகி வருகிறது.
அதன்படி, ஒருவர் ஈட்டும் ரூ.100-லிருந்து அது உங்கள் வங்கிக் கணக்கை அடைவதற்கு முன்பே, வருமான வரி என்று அதிகபட்சமாக 25 சதவீதம் வரை கழிக்கப்படுகிறது. இது சுமாராக ரூ.25 என்று கொள்ளலாம்.
மிச்சத் தொகை ரூ.75 ஆக இருக்கிறது. இதில் ஒருவர் செலவிடும் பல்வேறு செலவினங்களுக்கு ஜிஎஸ்டி என்ற பெயரில் கிட்டத்தட்ட 12 சதவீதம் அதாவது ஒரு மாதம் முழுக்க செய்யும் செலவுகளுக்காக வரி செலுத்துகிறோம். இது உணவு, மளிகை, துணிகள், சேவைகள், கட்டணங்கள் என பல வகைகளில் நம்மிடமிருந்து பெறப்படுகிறதாம்.
இதோடு நின்றுவிடுவதில்லை, பெட்ரோல், டீசல் வரிகள் மூலம் ஒருவர் தன்னுடைய சொந்த வாகனத்துக்கு எரிபொருள் நிரப்பும் போதும், பொது போக்குவரத்தைப் பயன்படுத்தும் போதும், இணையதள விற்பனை சேவைகளை பயன்படுத்தும் போதும் 10 சதவீதத் தொகை எரிபொருள் வரியாக கண்ணுக்குத் தெரியாமல் மத்திய அரசுக்குச் சென்று சேருகிறது என்று கூறப்படுகிறது.
ஏழை மக்களாக இருந்தாலும் இப்போது வங்கிக் கணக்கு இல்லாமல் வாழ முடியாத நிலையை ஏற்படுத்திய மத்திய அரசு, வங்கிச் சேவைக் கட்டணம், சாலையில் சென்றால் சுங்கக் கட்டணம், அரசு சேவைகளைப் பயன்படுத்தும்போது அதற்கான சேவைக் கட்டணம், செல்போன் கட்டணம் என 5 சதவீதத்தைப் பிடித்தம் செய்கிறது.
இவ்வளவையும் செலவிட்டும், பணவீக்கம் காரணமாக, பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்து அதனால், சராசரியாக செலவிடும் குறிப்பிட்டத் தொகையும் உயர்ந்துவிடுகிறது. இதனால், 8 சதவீதம் அதிகம் செலவிடும் நிலைக்கு மக்கள் தள்ளப்படுகிறார்கள். இவ்வாறு ஒவ்வொரு மக்களும் தாங்கள் ஈட்டும் வருவாயில் கிட்டத்தட்ட 52 சதவீதத் தொகையை மத்திய அரசுக்கே வரி, கட்டணம் என்ற வழிகளில் செலுத்தும் நிலை உள்ளது.
இதில், ஒருவர் அதிகப்படியான சேவைகளை பயன்படுத்தினால் இந்த தொகை அதிகரிக்கலாம். இந்த தரவுகளின்படி, ஒருவர் ஈட்டும் தொகையில் பாதிக்கும் மேல் வரி மற்றும் கட்டணங்களான செலுத்திவிட்டு, பாதிக்கும் குறைவான தொகையைத்தான் தங்களுக்காக செலவிடும், சேமிக்கும் நிலை இருப்பதாகக் கூறப்படுகிறது.
இது ஒருவர் ஈட்டும் தொகைக்கு ஏற்பவும், பெறும் சேவைகளுக்கு ஏற்படும், நகரம் மற்றும் கிராமத்துக்கு தகுந்தாற்போல கூடக் குறைய மாறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.