முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மறைந்த முன்னாள் முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயின் 101-ஆவது பிறந்தநாள் இன்று(டிச. 25) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையடுத்து தில்லியில் உள்ள வாஜ்பாயின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மத்திய அமைச்சர் ஜெபி நட்டா, தில்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில்,
"வாஜ்பாயின் பிறந்தநாள்.. அவரது வாழ்க்கையிலிருந்து உத்வேகம் பெறுவதற்கான ஒரு சிறப்பான நாளாகும். அவரது நடத்தை, கண்ணியம், சித்தாந்த உறுதிப்பாடு, தேச நலன், எல்லாவற்றிற்கும் மேலாக அவரது உறுதி ஆகியவை இந்திய அரசியலுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கின்றன. பதவியால் அல்ல, நடத்தையால்தான் சிறப்பு நிலைநாட்டப்படுகிறது என்பதையும் அதுவே சமூகத்திற்கு வழிகாட்டுகிறது என்பதையும் அவர் தனது வாழ்வின் மூலம் நிரூபித்தார்.
நல்லாட்சி, தேசத்தைக் கட்டியமைக்க தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தவர் வாஜ்பாய். சொற்பொழிவாளராக மட்டுமின்றி, உற்சாகக் கவிஞராகவும் எப்போதும் நினைவுகூரப்படுவார். வாஜ்பாயின் ஆளுமை, பணிகள், தலைமைத்துவம் நாட்டின் அனைத்துத் துறை வளர்ச்சிக்கும் வழிகாட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.